செய்திகள்
தற்கொலை

தக்கலை அருகே அரசு பள்ளி ஆசிரியை தூக்கு போட்டு தற்கொலை

Published On 2019-10-10 10:27 GMT   |   Update On 2019-10-10 10:27 GMT
தக்கலை அருகே மனஅழுத்தம் காரணமாக அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள கொல்லன்விளையைச் சேர்ந்தவர் வேல்தாஸ்(வயது51). இவர் நாகர்கோவில் ராணித் தோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சாந்தினி(46). இவர் கல்குளம் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

இந்த தம்பதிக்கு ராகினி என்ற மகள் உள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ராகினி பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல வேல்தாஸ்,சாந்தினி, ராகினி ஆகியோர் தூங்கச் சென்று விட்டனர்.

இன்று காலை பார்த்த போது ஆசிரியை சாந்தினி தனது அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இது பற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் அங்குச் சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது தனது அறையில் உள்ள மேஜையில் ஆசிரியை சாந்தினி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.

அந்த கடிதத்தில் தான் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்வதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் சாந்தினி எழுதி இருந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆசிரியை சாந்தினியின் மரணம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News