செய்திகள்
குழந்தைகள் (Photo: AP)

சீனாவில் இனி ஒரு தம்பதி மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம்

Published On 2021-05-31 10:54 GMT   |   Update On 2021-05-31 10:54 GMT
சீனாவின் புதிய கொள்கை மாற்றம் நாட்டின் மக்கள் தொகை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் என அரசு செய்தி நிறுவனம் தெரித்துள்ளது.
பீஜிங்:

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் பல ஆண்டுகளாக ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த கொள்கையில் கடந்த 2016ம் ஆண்டு மாற்றம் கொண்டு வரப்பட்டது. அப்போது, ஒரு தம்பதி இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டு, புதிய கொள்கை  அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்த நிலையில், சீன அரசு குடும்ப கட்டுப்பாட்டு விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. 

இதற்கான புதிய கொள்கை குறித்து சமீபத்தில் அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான பொலிட்பீரோ கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த கொள்கை மாற்றம் நாட்டின் மக்கள் தொகை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு உகந்ததாக இருக்கும் எனவும் தெரித்துள்ளது.



இந்த அறிவிப்பு குறித்து செய்தி வெளியானதும், சீன சமூக ஊடகங்களில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர். பலர் இந்த கொள்கையை ஆதரிக்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைக்கூட தங்களால் வளர்க்க முடியவில்லை என்று பலர் குறிப்பிட்டுள்ளனர்.

"நீங்கள் எனக்கு 5 மில்லியன் யுவான் (7.85 லட்சம் டாலர்) கொடுத்தால் மூன்று குழந்தைகளைப் பெற்று வளர்க்க நான் தயாராக இருக்கிறேன்" என்று ஒரு பயனர் வெய்போவில் பதிவிட்டிருக்கிறார்.

சீனாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் இந்த மாத துவக்கத்தில் வெளியானது. 1950களுக்கு பிறகு, கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை மிக மெதுவான விகிதத்தில் 1.41 பில்லியனாக அதிகரித்துள்ளது என்பதை அந்த புள்ளிவிவரம் காட்டுகிறது. 2020 ஆம் ஆண்டில் மட்டும் ஒரு பெண்ணுக்கு 1.3 குழந்தைகள் என்ற விகிதத்தில் கருவுறுதல் இருந்ததாகவும் தரவு காட்டுகிறது.
Tags:    

Similar News