உள்ளூர் செய்திகள்
திமுக நேர்காணல்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க. வேட்பாளர் தேர்வு தீவிரம்

Published On 2022-01-03 06:10 GMT   |   Update On 2022-01-03 07:38 GMT
ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுமா? அல்லது தள்ளி போகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆனால் தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலை ஜனவரி 31-ந்தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு கெடு விதித்துள்ளது.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தி.மு.க. தீவிரம் காட்டி வருகிறது.

தி.மு.க.வில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு இருந்தன. சென்னையில் உள்ள ஒவ்வொரு வார்டுக்கும் சுமார் 15 பேர் முதல் 25 பேர் வரை விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

அவர்களை அழைத்து நேர்காணல் நடத்த கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்தது. இதையொட்டி தி.மு.க.வில் வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட வார்டுகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 30-ந்தேதி சென்னை வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ராயபுரம், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் கட்சி நிர்வாகிகளை அழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது.

31-ந்தேதி சென்னை மாதவரத்தில் உள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் நேர்காணல் நடைபெற்றது. அங்கு திருவொற்றியூர், மாதவரம், செங்குன்றம் தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளுக்கு நேர்காணல் நடந்தது.

இந்த நிலையில் இன்று சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.வில் நேர்காணல் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் காந்தா தெருவில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நேர்காணல் தொடங்கியது.

ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, அண்ணாநகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களை அழைத்து இன்று நேர்காணல் நடத்தினார்கள்.

இந்த நேர்காணல் சென்னை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சிற்றரசு முன்னிலையில் நடைபெற்றது. இதில் தயாநிதி மாறன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எழிலன், மோகன் மற்றும் பகுதி கழக நிர்வாகிகள் அமர்ந்திருந்து நேர்காணலை நடத்தினார்கள்.

முதலில் ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட 8 வார்டுகளுக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளில் மனு கொடுத்தவர்களை அழைத்து நேர்காணல் நடத்தினார்கள்.

அதன்பிறகு அண்ணா நகர் தொகுதிக்கு உட்பட்ட வார்டுகளுக்கு நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில் சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். நேர்காணல் முடிந்ததும் ஒவ்வொரு வார்டுக்கும் 3 பேர் பெயர் பட்டியலை தயாரித்து கட்சி தலைமைக்கு அனுப்புகிறார்கள். அதில் ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்து கட்சி தலைமை அறிவிக்கும்.

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்களின் அரசியல் அனுபவம், கட்சியில் செய்த சாதனைகள் ஆகியவற்றை அறிந்து கொண்டு சீட் வழங்கப்படும் என்று தெரிகிறது.

இதே போல் தமிழ்நாடு முழுவதும் நேர்காணல் நடத்தப்பட்டு வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.



Tags:    

Similar News