உள்ளூர் செய்திகள்
அமைச்சர் சுப்பிரமணியனிடம், முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

நாகை அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள்- அமைச்சரிடம், எம்.எல்.ஏ. மனு

Published On 2022-01-11 09:57 GMT   |   Update On 2022-01-11 09:57 GMT
நாகை அரசு மருத்துமனைக்கு தேவையான வசதிகள் செய்துதரக்கோரி அமைச்சரிடம், நாகை எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
நாகப்பட்டினம்:

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம், நாகை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இல்லாததாலும், ஸ்கேன் எடுக்கும் பிரிவு சீராக இயங்காததாலும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர்.

பல்வேறு சிகிச்சை களுக்காக நாகப்பட்டினம் பொதுமருத்துவமனைக்கு செல்பவர்களை, பெரும்பாலும் திருவாரூர் அல்லது தஞ்சாவூர் மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பிவிடும் சூழ்நிலை நிலவுகிறது. இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக முறையீடுகள் வந்த வண்ணம் உள்ளன.

பலமுறை இதை அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பிறகும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. எனவே அமைச்சர் உடனடியாக இதில் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும், மேலும் நாகை தொகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உடனடியாக இதுகுறித்து விசாரிப்பதாகவும், தேவையெனில் நாகப்பட்டினத்திற்கே நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
Tags:    

Similar News