செய்திகள்
கொரோனா வைரஸ்

நாடு முழுவதும் பாதிப்பு 39 ஆயிரத்தை தாண்டியது- கேரளாவில் அதிவேகமாக பரவும் கொரோனா

Published On 2021-07-24 05:46 GMT   |   Update On 2021-07-24 05:46 GMT
கேரளாவில் திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 13 லட்சத்து 32 ஆயிரத்து 159 ஆக உயர்ந்தது.

கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் ஆகும். அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,518 ஆக உயர்ந்தது. 1,28,489 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு சதவீதம் 13.63 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம் 17-ஆக உள்ளது. இதேபோல திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது.



சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளே தொற்று பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

அதன்படி மத்திய-மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கவும், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் மகாராஷ்டிரத்தில் 167, கேரளாவில் 132 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 546 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,20,016 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,31,205, கர்நாடகாவில் 36,323, தமிழ் நாட்டில் 33,862, டெல்லியில் 25,041, உத்தரபிரதேசத்தில் 22,748 பேர் அடங்குவர்.

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 35,087 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 5 லட்சத்து 3 ஆயிரத்து 166 ஆக உயர்ந்தது.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 4.05 லட்சமாக இருந்த நிலையில், தற்போது 4.08 லட்சமாக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 42.78 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில், இன்று காலை 7 மணி வரையிலான நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 42,67,799 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று 16,31,266 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

இதுவரை செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 45.45 கோடியாக உயர்ந்துள்ளது.


Tags:    

Similar News