சிறப்புக் கட்டுரைகள்
கவிஞர் இரவிபாரதி

அமைதியைத்தேடி அலைகின்றேன்... கண்ணதாசனின் விரக்தியும் அதற்கான விடையும்- 20

Published On 2022-04-16 11:54 GMT   |   Update On 2022-04-16 11:54 GMT
மனம் போன போக்கிலே செல்லாமல், மனதை அடக்கி ஆளத் தெரிந்தவன் தப்பித்துக் கொள்கிறான். சபலப்படுகிற மனிதனெல்லாம் சங்கடத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.

“அமைதி” என்ற மூன்றெழுத்தைத் தேடித்தான் இந்த மானிட உலகமே பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. இல்லாதவன் உள்ளத்திலும் அமைதியில்லை. இருப்பவன் மனதிலும் நிம்மதியில்லை.

இயலாமையினால் இல்லாதவன் வருத்தப்படுவதில் அர்த்தம் இருக்கிறது. இருப்பவனும் மன நிம்மதியை இழந்து தவிக்கிறானே. அதை என்னென்று சொல்வது எல்லாவற்றுக்கும் காரணம் மனம் என்னும் அந்த மூன்றெழுத்துத்தான்.

“மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்” போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து -என்று முன்னோர்கள் மொழிந்ததை யாரும் காதிலே வாங்கிக் கொள்ளவே இல்லை. அதனால்தான் இப்படி அனைவருக்கும் அமைதி இல்லாத தொல்லை.

மனம் போன போக்கிலே செல்லாமல், மனதை அடக்கி ஆளத் தெரிந்தவன் தப்பித்துக் கொள்கிறான். சபலப்படுகிற மனிதனெல்லாம் சங்கடத்திலே மாட்டிக் கொண்டு முழிக்கிறான்.

நமக்குள்ளே இருக்கிற மனமென்னும் மாமருந்தை எப்போது? எப்படிப் பயன்படுத்த வேண்டும்? என்பதை திருவள்ளூரில் இருந்து திருமூலரில் இருந்து வள்ளல்பெருமானில் இருந்து பாரதி, பாவேந்தர் என மூத்த கவிஞர்கள் எல்லோருமே எழுதியிருக்கிறார்கள். நமது கவியரசர் கண்ணதாசனும் “அமைதியைத் தேடி அலைகின்றேன்” என்ற வித்தியாசமான தலைப்பிலே எழுதியிருக்கிறார். அவரது கண்ணோட்டம் எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.

பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயம் என்பது பரந்து விரிந்தது. இறைவனின் அற்புதப் படைப்பு அது. கற்பனை வானம் என்பது அதைவிடப் பெரியது. அதற்கு எல்லையே இல்லை. உதாரணத்திற்கு இயற்கை வானத்தில் ஓராயிரம் நட்சத்திரம் இருப்பதாக வைத்துக் கொண்டால், கற்பனை வானத்தில் நீங்கள் பத்தாயிரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அந்த உரிமையில்தான் “எனது வானத்தில் எண்ணிலா மீன்கள்” என்கிறார் நமது கவியரசர் கண்ணதாசன். அதே போல் அவரது தோட்டத்தில் காணும் இடமெல்லாம் பூக்கள் மலர்ந்து மனம் பரப்புவதாகச் சொல்லுகிறார். மனித ஜாதியில் என்னை ஒரு கவிஞனாகப் படைத்ததால், “நான் ஒரு மகத்துவமான தத்துவம்” என்று பெருமிதம் கொள்கிறார் கண்ணதாசன்.

என் மனதிலே ஏகப்பட்ட சிந்தனைகள். கனவுகளும் நினைவுகளும் கோடிக்கணக்கிலே. அது மட்டுமல்ல எல்லா வற்றையும் எழுத்து வடிவத்திலே வடித்துக் கொடுக்கிற அசாத்தியமான ஆற்றலையும் கொடுத்திருக்கிறான் இறைவன். இவற்றையெல்லாம் கொடுத்த இறைவன் மன அமைதியைத் தர மறந்து விட்டானே என்று வருந்துகிறார் கண்ணதாசன். இதோ அந்தக் கவிதை...

எனது வானத்தில் எண்ணிலா மீன்கள்
எனது தோட்டத்தில் எங்கெங்கும் பூக்கள்
புனிதமா நதிகள் பொலிந்திடும் மணிகள்
மனித ஜாதியில் நான் மகத்தான தத்துவம்...
கனவினில் எழுந்த கவிதைகள் கோடி
நினைவினில் மலர்ந்த நிலைஒரு கோடி
மனதினில் எழுந்த மாபெரும் மொழிகள்
இனிதாய் புதிதாய் எளிதாய்ப் பிறந்தன...
ஆயினும் என்ன மானிடரே?
அமைதியைத் தேடி அலைகின்றேன்...

படைப்புத் தொழிலில் இருப்பதால் நானும் இறைவனும் ஒரே வரிசையில் வைத்து எண்ணப்படுகிற நண்பர்கள் என்கிறார் கவிஞர். எனக்கு நினைத்த உடனேயே கானம் இசைக்கவும் தெரியும். கலையின் பல வடிவங்களை உருவாக்கவும் முடியும். காலம் என்னும் கடலைக் கடக்கும் தோணியாக நானிருப்பதால் கற்பனை உலக கரைகளுக்கு அடிக்கடி சென்று திரும்புகிறேன் என்கிறார் கண்ணதாசன்.

நான் தொட்டது அனைத்தும் துலங்கின என் கை பட்டது அனைத்தும் பசுமையாய்ப் படர்ந்தன. எவருக்கும் எட்டாததாக இருந்தது எனக்கு எட்டின. அவை என் கைக்கு கிட்டின என்று “உயர்வு நவிற்சி அணி”யாகவே உரைக்கிறார் கண்ணதாசன்.

காலமா கடலைக் கடக்கும் தோணிநான்
கற்பனை உலகின் கரைகளைக் கண்டவன்
கானம் கலைஎந்தன் கைவண்ணமாகும்
நானும் இறைவனும் நண்பர்களாவோம்.
தொட்டவை எல்லாம் தொழிலாய் மலர்ந்தன
பட்டவை யெல்லாம் பசுமை எய்தின
எட்டாதன வெல்லாம் என் கையில் எட்டின
கிட்டா தனைத்தும் கிட்டின... கிடந்தன...
ஆயினும் என்ன மானிடரே
அமைதியைத் தேடி அலைகின்றேன்... என்று எல்லாம் இருந்தும் என்ன? அமைதி கிட்ட-வில்லையே என்று வருந்துகிறார் கண்ணதாசன்.

கவிதையைப் பொறுத்தவரையில், தொல் காப்பியப் புலவர்க்குள்ள திறமையையும், நல்காப்பியம் வடிக்கின்ற புலமையையும் இறைவன் எனக்களித்துள்ளான். எவருக்கும் கிடைக்காத அளவில் புகழ் என்னும் மணி மகுடத்தையும் வழங்கியுள்ளான். அது மட்டுமல்ல குமரி முதல் இமயம் வரை என் பெயர் தெரியும் அளவுக்கும் அமெரிக்கா போன்ற அயலக நாடுகளும் அறியும் வண்ணம் என் புகழ் கொடி பறக்கவும் செய்துள்ளான் என்று பெருமிதம் கொள்கிறார் கண்ணதாசன்.

“இமயம் வரைக்கும் என்பெயர் தெரியும் குமரிக் கடலும் என் குணம் சொலி ஆடும் அமெரிக்க வானம் என் அருமையைப் பாடும் ஆயினும் என்ன மானிடரே அமைதியைத் தேடி அலைகின்றேன்” “தொல்காப்பியனுக்கும் சூத்திரம் சொல்வேன் நல்காப்பியங்களை நானே வடிப்பேன் பல்காப்பியங்களில் பரந்து நான் நிற்கிறேன் எல்லாப் பெரும்புகழ் உடையவன் நானே” என்று தனது திறமை பற்றிய மதிப்பீட்டினை, உயர்த்தி பிடிக்கும் கண்ணதாசன், அமைதியைத் தேடி அலைவதாகவே மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார்.

ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. தாய் தனது உதிரத்தையும், பாசத்தையும் கொட்டித்தான் அந்தப் பிள்ளையை வளர்க்கிறாள். அந்த தாய்க்குத்தான் தனது பிள்ளைக்கு எந்த நேரத்தில் பசிக்கும் என்பது தெரியும். தனது பிள்ளைக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? என்பதும் தெரியும். அந்தந்த நேரத்தில் அன்போடு கவனித்து அந்தப் பிள்ளையை ஊட்டி வளர்க்கிற பாங்கும், பண்பும் பெற்ற தாய்க்கு மட்டுமே உரித்தானது. உவகைமிக்கது.

புறநானூற்றுப் பாடலில் “ஈன்று புறந்தடுதல் என்தலைக் கடனே” என்ற ஒற்றை வரியில் ஓராயிரம் அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. அதே போலத்தான் தந்தையின் கடமை பற்றியும் “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்று அந்த புறநானூற்று பாடல் பேசுகிறது.

உரிய பருவத்திலே பிள்ளையைப் பள்ளியில் சேர்த்து, அவனுக்கு முறையான கல்வியை ஊட்டி அவன் ஒரு சான்றோன் ஆவது வரைக்கும் தந்தை படும்பாடு சொல்லி மாளாது.

ஒரு பிள்ளையின் புறவாழ்க்கையைப் பற்றிச் சிந்தித்து அவன் ஒரு வேலையில் சேர்ந்து நல்ல ஊதியம் பெறுகிற வரைக்கும் தந்தையின் கவலையும் கடமையும் அளப்பரியது. ஆனால் அதே சமயம் அந்தப் பிள்ளை பெரியவனானதும் அவனுக்கு நல்ல இடத்திலே மணமுடித்து, நல்ல மனைவியைப் பெற்றுக் கொடுக்கிற வாழ்க்கை கடமையில் பெரும் பங்கு தாயினுடையது. தனது மகனின் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்க வேண்டுமென்றும் பிள்ளைச் செல்வம் வாய்க்க வேண்டும் என்றும் தாய்தான் குலதெய்வத்திடம் வேண்டிக் கொண்டே இருப்பாள். இதைத்தான் கண்ணதாசன்.

“தாயார் பெற்றுத் தாலாட்டி வளர்த்து சம்சாரம் கையில் தந்துபோய் விட்டாள்” என்கிறார். அதற்குப் பின்னாலே கணவனைக் கவனிப்பதில் மனைவியின் பங்களிப்பில் ஒரு சின்ன இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. மகன், மருமகன், பேரப்பிள்ளைகள் என்று தாயினது பாச எல்லைகள் விரிவடைந்து போவதால் தான் இந்த இடைவெளி. இருந்தாலும் அந்த மனைவியின் பார்வை தனது கணவன் மீது இருந்து கொண்டுதான் இருக்கும்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு “நோயார்” உள்ளே நுழைந்து விட்டால் போதும் அந்தக் கணவன் படும்பாடு பெரும்பாடு என்றுதான் சொல்ல வேண்டும். இதைத்தான் கண்ணதாசன்.

“நோயார் உடம்பில் நுழைந்து நிறைந்தனர் நான் யார்? என்பதை நானே அறிந்தனன்” என்ற வரிகளால் விளக்குகிறார். (நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும் என்ற பொருளில்) உடலால் நான் வலிமை இழந்திருந்தாலும் உள்ளத்தால் நான் பலமாகவே இருக்கிறேன். என்னைப் படைத்த அந்த மாயன் (கண்ணன்) என்னை ஒரு போதும் கைவிட மாட்டான். அவனது ஆற்றலை நான் நன்கறிவேன். நான் அவன் மீது கொண்டுள்ள பற்றினையும், அவன் என் மீது கொண்டுள்ள பாசத்தையும் ஒருவருக்கொருவர் பரஸ்பரமாக உணர்ந்துள்ளோம். அதனால்தான் அந்த மாயனை நினைத்து மயங்குகிறேன் என்று எழுதுகிறார் கண்ணதாசன்.

அந்த கண்ணனிடம் நான் கொண்டுள்ள பக்தியை எதைக் கொண்டும் அளவிட முடியாது. அது வானத்தைவிடப் பரந்தது. கடலைக் காட்டிலும் ஆழமானது. அதன் காரணமாகவே எனது காலடிச் சுவடுகள் கரையேறுகின்றன. ஆல்போல் பரந்து விரிந்த ஞானமுள்ள நூல்களை நான் படைக்க முடிகிறது. ஆகவே அந்த மாலவன் முடியில் இருந்து நான் மணியாக இருந்து ஒலித்துக் கொண்டே இருப்பேன். அந்த ஒலியில் எனது கவிதைகள் காலத்தையும் வென்று நின்று ஒளிவீசும் என்கிறார் கண்ணதாசன்.

காலடிச் சுவடுகள் கரையேறட்டும்
ஆலிலை நூல்பல அரங்கேறட்டும்
மாலவன் முடியில் நான் மணியாகட்டும்
காலமாய் நின்று நான் கவிபாடட்டும்-என்றும்
தாயினும் பெரிய மானிடரே தலைவனைத் தேடி அலைகின்றேன்-என்றும் கவிதையை நிறைவு செய்கிறார் கண்ணதாசன்.

ஒட்டு மொத்தமாக இந்தக் கவிதையை ஆராய்ந்து பார்க்கையில் ஏதோ ஒரு விரக்தியின் வெளிப்பாடாகவே இதனை எழுதி இருக்கிறார் என்பது மட்டும் நமக்குப் புரிகிறது. ஏனென்றால் பின்னாளில் என் தலைவனை நான் கண்டு கொண்டேன் என்று கண்ணனை, நெஞ்சிலேயும், கவிதையிலும் சுமந்தபடி “கிருஷ்ண கவசத்தையும்”, “ஸ்ரீகிருஷ்ண அந்தாதி”யையும் நமக்குப் படைத்தளித்துள்ளார்.

ஆக மொத்தத்தில் கவிஞரின் மனதிலே நிம்மதியும் அமைதியும் இல்லை என்பதை நம்மாலே ஊகிக்க முடிகிறது. அதை உண்மையாக்கும் வகையிலே

எங்கே நிம்மதி... எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதன் யாருமில்லையோ
அங்கே எனக்கொரு இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும்போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது.
என்ன நினைத்து என்னைப் படைத்தான்
இறைவன் என்பவனே
என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால்
வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால்
உறங்குவேன் தாயே... என்று கவிஞர் எழுதிய “புதிய பறவை” பாட்டு நம் இதயங்களில் இன்றும் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அடுத்த வாரம் சந்திப்போம்
Tags:    

Similar News