செய்திகள்
அமித் ஷா, டாக்டர் ராமதாஸ்

இந்தியைப் பயன்படுத்தினால்தான் நாடு முன்னேறும் என்பது மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயல்: டாக்டர் ராமதாஸ்

Published On 2021-09-14 12:08 GMT   |   Update On 2021-09-14 12:08 GMT
தாய்மொழியுடன் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்து, மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயல் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி, இந்தியாவின் ஆட்சி மொழிகளுள் ஒன்றாக 1949-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி தேர்வு செய்யப்பட்டது. இதனையொட்டி ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் தேதி இந்தி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த வருடமும் செப்டம்பர் 14-ம் தேதியான இன்று இந்தி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தி தினத்தையொட்டி மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா  தனது டுவிட்டரில், “இந்தி திவாஸ் நாளான இன்று, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது தாய்மொழியுடன் இந்தியையும் அடிப்படை வேலைகளுக்குப் பயன்படுத்த உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவின் முன்னேற்றம் தாய்மொழி மற்றும் அலுவல் மொழியின் ஒருங்கிணைப்பில் அடங்கியுள்ளது. அனைவருக்கும் இனிய இந்தி திவாஸ் வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் தாய்மொழியுடன் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அமித் ஷாவின் கருத்து,  மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் செயல் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியிருக்கிறார். இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயலாகும்!

இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும்  என்று கூறுவதில் ஏராளமான  பொருள்கள் மறைந்து கிடக்கின்றன. அது தவறு... அவ்வாறு கூறக்கூடாது!

தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் கிடக்கிறது. அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச்சமநிலையை  மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்!” என்று அதில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News