செய்திகள்
தென்ஆப்பிரிக்கா வீரர்கள்

இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

Published On 2021-01-05 17:09 GMT   |   Update On 2021-01-05 17:09 GMT
செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-0 எனக் கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் நேற்றுமுன்தினம் தொடங்கியது.

டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் அன்ரிச் நோர்ஜே-யின் (6 விக்கெட்) பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா டீன் எல்கர் (127), வான் டெர் டுஸ்சென் (67) ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் 302 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 145 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 3-வது நாள் ஆட்டத்தில் தொடக்க பேட்ஸ்மேன் கருணாரத்னே 103 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்களில் திரிமானே 31 ரன்களும், டிக்வெல்லா 36 ரன்களும், டி சில்வா 16 ரன்களும் அடித்தனர்.

மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ரன்னில் வெளியேற இலங்கை 211 ரன்னில் சுருண்டது. இதனால் 66 ரன்கள் முன்னிலை பெற்று தென்ஆப்பிரிக்கா அணிக்கு 67 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் 2-வது இன்னிங்சில் லுங்கி நிகிடி 4 விக்கெட்டும், சிபாம்லா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 67 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுக்க 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மார்கிராம் 36 ரன்களும், டீன் எல்கர் 31 ரன்களும் சேர்த்தனர்.

ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது.
Tags:    

Similar News