செய்திகள்
வங்கி

பொதுத்துறை வங்கிகளில் சிறப்பு விருப்ப ஓய்வு திட்டம்- மத்திய அரசு தகவல்

Published On 2021-06-09 10:02 GMT   |   Update On 2021-06-09 10:02 GMT
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் பெயர்கள் தனியார் மயமாக்கலுக்கான பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1-ந் தேதி 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனத்தை தனியார் மயமாக்க அரசு முன்மொழிந்ததாக அறிவித்தார்.

அதே போல் ஏர்-இந்தியா தனியார் மயமாக்கலும் உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஏர்-இந்தியாவில் ஊழியர்களுக்கு சிறப்பு விருப்ப ஓய்வு திட்டத்தை விரைவில் மத்திய அரசு அறிவிக்கும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதி ஆயோக்கின் பரிந்துரைகளை ஏற்று சிறப்பு விருப்ப ஓய்வு திட்டம் கொண்டு வரப்படுகிறது. இது குறித்து நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, பொதுத்துறை வங்கிகளில் விருப்ப ஓய்வு திட்டம் கொண்டு வரும் ஆலோசனை இருந்தது.

அதே போல் இந்த திட்டத்தை ஏர்-இந்தியா மற்றும் காப்பீட்டு நிறுவனத்திலும் அமல்படுத்த நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

கவர்ச்சிகரமாக விருப்ப ஓய்வு திட்டம் மூலம் வங்கிகளை தனியார் துறையினர் கையகப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும்.
வி.ஆர்.எஸ். மூலம் பணியாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் எண்ணம் இல்லை. ஓய்வு பெற விரும்பும் ஊழியர்களுக்கு நன்மை கிடைக்கும். இத்திட்டத்தின் கீழ் அவர்கள் கவர்ச்சிகரமான நிதி தொகுப்பை பெற முடியும் என்றார்.

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, பேங்க் ஆப் மகராஷ்டிரா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளின் பெயர்கள் தனியார் மயமாக்கலுக்கான பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மீது முக்கியத்துறை செயலாளர்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.

அரசுக்கு சொந்தமாக வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு உதவியாக இந்த சிறப்பு விருப்ப ஓய்வு திட்டம் கொண்டு வரப்படுகிறது.
Tags:    

Similar News