செய்திகள்
கோப்புபடம்

கோவை பெயிண்டர் கொலை வழக்கில் சரணடைந்த 2 வாலிபர்கள் சிறையில் அடைப்பு

Published On 2021-04-29 11:43 GMT   |   Update On 2021-04-29 11:43 GMT
கோவை அருகே பெயிண்டர் கொலை வழக்கில் சரணடைந்த 2 வாலிபர்களை போலீசார் சிறையில் அடைத்தனர்.

ஈரோடு:

கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 44). பெயிண்டர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே ரத்த காயங்களுடன் தர்மலிங்கம் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து வடவள்ளி போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வைத்திருந்த 3 கிராம் நகை மற்றும் பணத்தை தர்மலிங்கம் திருடி சென்று விட்டதாக நினைத்து அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றி கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு தர்ம லிங்கத்தை கொலை செய்ததாக பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார், வடவள்ளி பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 2 பேரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் தர்மலிங்கத்தை கொலை செய்த வழக்கில் தலைமறைவான கோவை கே.சி.தோட்டம், 3-வது செட்டி வீதியை சேர்ந்த காளிதாஸ் (39), செல்வபுரம் ஆர்.பி.பாரதி வீதியை சேர்ந்த தனஞ்செயன் (34) ஆகிய 2 பேரும் நேற்று ஈரோடு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி வடிவேல் முன் சரணடைந்தனர்.

இதனையடுத்து நீதிபதி அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News