உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பூச்சி தாக்குதலால் அவரை உற்பத்தி பாதிப்பு

Published On 2022-04-17 06:55 GMT   |   Update On 2022-04-17 06:55 GMT
வழக்கமாக அவரை பயிரிட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 கிலோ வரை உற்பத்தி கிடைக்கும்.
பல்லடம்:

பல்லடம் வட்டாரத்தில் தக்காளி, வெங்காயம், வெண்டை, புடலை, அவரை, பாகல் உள்ளிட்ட பல்வேறு வகை காய்கறி பயிர்கள், தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு, பூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவரையை தாக்கும் பூச்சிகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து காளிநாதம்பாளையத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ் கூறியதாவது:

வழக்கமாக அவரை பயிரிட்டால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் 15 கிலோ வரை உற்பத்தி கிடைக்கும். தற்போது பூச்சி தாக்குதலால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை காலங்களை விட வெயில் காலங்களில் அவரை சாகுபடி செய்வது சவாலானது. வாரம் இரண்டு முறை மருந்து தெளித்து பூச்சிகள் கட்டுப்படவில்லை.

பூக்களை தின்னும் பேன் பூச்சிகளால் காய் பிடிப்பது பாதிக்கிறது. குறிப்பாக அவரை செடிகளுக்கு இடையே முளைக்கும் களைக்கொல்லிகளை அழிக்க மருந்துகள் பயன்படுத்த முடியாது. ஒரு மாதத்துக்கு முன் கிலோ 10 ரூபாய்க்கு அவரை விற்பனையானது.

தற்போது கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனையாகிறது. போதிய விலை இருந்தும் விளைச்சல் இல்லாதது கவலை அளிக்கிறது. பூச்சி தாக்குதலுடன் காய்களில் வெள்ளை விழுவதால், காய்களை வாங்க மறுக்கின்றனர். பூச்சி மற்றும் நோய் தாக்குதலுக்கு சிறந்த தீர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News