செய்திகள்
கோப்பு படம்

மனைவியை அழைக்க சென்ற வாலிபர் மீது தாக்குதல் - 10 பேர் மீது வழக்கு

Published On 2020-01-09 10:07 GMT   |   Update On 2020-01-09 10:07 GMT
வல்லம் அருகே மனைவியை அழைக்க சென்ற வாலிபர் மீது தாக்குதல் நடத்தியதாக 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வல்லம்:

தஞ்சை அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மேட்டுத் தெருவை சேர்ந்த ஞானசெல்வம் என்பவரின் மகன் ஜெயசீலன் (வயது 28). இவர் அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகள் தேவிகாவை காதலித்து இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் ரெட்டிப்பாளையம் மேட்டுத்தெருவிலேயே வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் தேவிகா கருவுற்றார். அதன் பிறகு பிரசவத்திற்காக அவர் அதே பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்றார். பிரசவம் முடிந்து குழந்தையுடன் தேவிகா அவரின் பெற்றோர் மற்றும் அவரின் சகோதரர் தேவாவுடன் தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று இரவு ஜெயசீலன் அவரது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மாரிமுத்துவிடம் ஜெயசீலன் மனைவி மற்றும் குழந்தையை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

இதற்கு மாரிமுத்து ஒரு சில நாட்களுக்கு பிறகு தேவிகாவையும், குழந்தையையும் அனுப்பி வைப்பதாக ஜெயசீலனிடம் தெரிவித்ததாக தெரிகிறது. ஜெயசீலன் அதனை ஏற்றுக்கொள்ளாமல் உடனடியாக தேவிகாவையும், குழந்தையையும் அனுப்பு மாறு கூறி இருக்கிறார். அப்போது அங்கிருந்த மாரிமுத்துவின் மகன் தேவா (24) என்பவர் ஜெயசீலனிடம் மறுநாள் காலை வருமாறு தெரிவித்துள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெயசீலன், தேவா இருவருக்கும் ஆதரவாக அந்த பகுதியை சேர்ந்த சில நபர்களும் அங்கு வந்ததாக கூறப்படுகிறது.

இவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளை திட்டிக்கொண்டு கட்டையாலும், கம்பியாலும் தாக்கி கொண்டனர்.இந்த தகராறில் ஜெயசீலன்,தேவா இருவருக்கும் காயம் ஏற்பட்டு அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் குறித்து ஜெயசீலன் கொடுத்த புகாரின் பேரில் தேவா, தேசிங்கு, பன்னீர், இளங்கோ, ஜீவராஜ் மற்றும் தேவா கொடுத்த புகாரின் பேரில் ஜெயசீலன், ராஜேந்திரன், பிரகாஷ், விசுவநாதன், ரூபன் ஆகிய 10 பேர் மீது கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News