உள்ளூர் செய்திகள்
200 சிறப்பு பஸ்கள்

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல கோவையில் இருந்து கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள்

Published On 2022-01-11 10:37 GMT   |   Update On 2022-01-11 10:37 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது
கோவை:

பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை யொட்டி கோவையில்  வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள். 

இதனால் பஸ்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். இதனை தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டுகிறது. 

இதே போல சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து திருச்சி, மதுரை சிவகங்கை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், நெல்லை, ராஜபாளையம், குமுளி, தேனி ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டுகிறது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதலாக 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 

நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை கோட்டம் சார்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து  நாளை (புதன்கிழமை) முதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

கொடிசியா தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து சேலம் மற்றும் சேலத்தை கடந்து செல்லும் வழித்தட பஸ்கள். திருச்சி மற்றும் திருச்சியை கடந்து செல்லும் வழித்தட பஸ்கள் ஆகியவை இங்கு இருந்து இயக்கப்படுகிறது. இங்கு பஸ்கள் நிறுத்தும் இடம், தற்காலிக நிழற்குடை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது.

இதே போல சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை மற்றும் மதுரையை கடந்து வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் மற்றும் தேனி மற்றும் தேனியை கடந்து வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் இங்கு இருந்து இயக்கப்பட உள்ளது.  இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

கோவையில் மொத்தம் 1,117 பஸ்கள் உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கூடுதலாக 200 பஸ்கள் இயக்கப்பட்ட உள்ளது. பஸ் நிலையங்களில் பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருக்கும். 

பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனுப்பபடும். கொரோனா பரவலை முன்னிட்டு அரசின் வழிகாட்டுதலின்படி 75 சதவீத பயணிகள் மட்டுமே ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பஸ்சில் பயணிகள் முக கவசம் அணிந்து , சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்படுவார்கள். முககவசம் அணியாத பயணிகள் பஸ்சில் ஏற அனுமதிக்கப்படமாட்டார். இவ்வாறு அவர்கள் கூறினார். 
Tags:    

Similar News