ஆன்மிகம்
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்

Published On 2019-07-04 06:21 GMT   |   Update On 2019-07-04 06:21 GMT
காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா 13-ந்தேதி தொடங்குகிறது. இதையொட்டி பந்தல் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
சிவபெருமான் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவருமான காரைக்கால் அம்மையார். இவரது வாழ்க்கை வரலாற்றுபடி ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெறுவது வழக்கம்.

4 நாட்கள் நடைபெறும் இவ்விழா இந்த ஆண்டு முதல் 5 நாட்களாக நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) மாலை மாப்பிள்ளை அழைப்புடன் விழா தொடங்குகிறது. 14-ந் தேதி காலை திருக்கல்யாண நிகழ்ச்சியும், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு நிகழ்ச்சியும், 15-ந் தேதி மாலை பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகமும், 16-ந் தேதி பவழக்கால் சப்பரத்தில் பிச்சாண்டவர் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக மாங்கனிகளை வீசி எறிவார்கள். மாலையில் அமுது படையல், இரவு முத்து சிவிகையில் சித்தி விநாயகர் கோவிலுக்கு பரமதத்தர்-புனிதவதியார் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 17-ந்தேதி அதிகாலை அம்மையாருக்கு இறைவன் காட்சி அளிக்கிறார்.

விழாவை முன்னிட்டு, கோவில் வாசலில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. விழாவில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்படும் கோவில் பொம்மைகள் வண்ணம் தீட்டி அழகுப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர், கோவில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் பலர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News