ஆன்மிகம்
லெண்டித் தோட்டம்

லெண்டித் தோட்டத்தின் பெருமையையும், சிறப்பும்

Published On 2019-10-25 06:47 GMT   |   Update On 2019-10-25 06:47 GMT
சீரடி தலத்தில் பாபாவை வணங்கி முடித்து, குருஸ்தானில் வழிபாடுகளை செய்து விட்டு, உதி வாங்கியதும், அருகில் உள்ள லெண்டித் தோட்டத்துக்கு செல்லலாம்.
சீரடி தலத்தில் பாபாவை வணங்கி முடித்து, குருஸ்தானில் வழிபாடுகளை செய்து விட்டு, உதி வாங்கியதும், அருகில் உள்ள லெண்டித் தோட்டத்துக்கு செல்லலாம். அங்குள்ள பசுமையான மரங்களும், மலர்ச் செடிகளும், பச்சைப் புல்வெளிகளும் நம் மனதை கொள்ளை கொள்ளும். சாய்பாபாவே இந்த தோட்டத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. விதம், விதமாக செடிகளை நட்டு, அவற்றுக்கு அவர் தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தார்.

செடி வளர்க்க தண்ணீர் தேடி வேறு இடங்களுக்கு அலையக் கூடாது என்பதற்காக லெண்டித் தோட்டத்து உள்ளே கிணறு ஒன்றை பாபாவே ஏற்படுத்தினார். அந்த கிணறுக்கு ஷீவடி என்று பெயர்.

தினமும் பாபா அதிகாலையிலேயே எழுந்து ஷீவடி கிணற்றில் இருந்து குடம், குடமாக தண்ணீர் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றி வளர்த்தார். இதனால் லெண்டித் தோட்டம் முழுவதும் பாபாவின் பாதமலர் கமலங்கள் பட்டுள்ளன.

அந்த தோட்டத்துக்குள் சென்று ஒவ்வொரு பகுதியையும் அவசரப்படாமல் ஆற அமர்ந்து பாருங்கள். பாபா ஒவ்வொரு மரத்தையும் எந்த அளவுக்கு விரும்பி வளர்த்தார் என்பது தெரிய வரும்.

லெண்டித் தோட்டம் பகுதியில் ஏற்கனவே ஒரு பெரிய அரச மரம் இருந்தது. அதன் அருகில் ஒரு வேப்ப மரத்தை நட்டு பாபா வளர்த்தார். அந்த மரம் இன்னமும் லெண்டித் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்து நிற்பதைக் காணலாம். அந்த மரங்கள் உள்ள இடத்தில் பாபா ஒரு பெரிய பள்ளம் தோண்டி அகண்ட நந்தா விளக்கு தீபம் ஏற்றி வைத்தார். அந்த நந்தா தீபம் இடைவிடாமல் எரிவதற்காக அப்துல்லா என்பவரை பொறுப்பாளராக பாபா நியமித்தார்.

பாபாவையும், அப்துல்லாவையும் தவிர வேறு யாரும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. பாபா தினமும் காலை, மதியம், மாலை மூன்று நேரமும் நந்தா தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வந்து விடுவார்.

அந்த தீபத்தைப் பார்த்துக் கொண்டே இருப்பார். சில சமயம் அரச மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த சிந்தனை செய்தபடி இருப்பார். சில நாட்கள் அங்கு மணிக்கணக்கில் கூட பாபா அமர்ந்து விடுவது உண்டு.

லெண்டித் தோட்டத்துக்குள் வரும் பக்தர்களில் 90 சதவீதம் பேர் நந்தா தீபம் உள்ள பகுதியை சர்வ சாதாரணமாக பார்த்து விட்டு செல்கிறார்கள். ஆனால் நீங்கள் அப்படி செய்து விடாதீர்கள்.

பாபா மனம் லயித்த அந்த இடம் நிச்சயம், அவருக்குள் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்திய இடமாகும். எனவே உங்கள் வேண்டுதல்களை மறக்காமல் நந்தா தீபத்தை வணங்கி வையுங்கள். நிச்சயம் பாபா அருள்புரிவார்.

சமீப காலமாக லெண்டித் தோட்டத்தில் ஏராளமான மலர்ச்செடிகள் வளர்த்து கண்ணுக்கு குளிர்ச்சியான நந்தவனமாக மாற்றியுள்ளனர். ஆங்காங்கே இருக்கைகளும் போட்டுள்ளனர்.

அந்த இருக்கைகளில் சற்று நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம். அந்த சமயத்தில் லெண்டித் தோட்டத்தின் பெருமையையும், சிறப்பையும் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கலாம். 
Tags:    

Similar News