ஆட்டோமொபைல்
வீட்டிலேயே தயாரான ஹெலிகாப்டர்

யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே தயாரான ஹெலிகாப்டர் - மெக்கானிக் அசத்தல்

Published On 2019-12-02 11:24 GMT   |   Update On 2019-12-02 11:24 GMT
கடும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க கார் மெக்கானிக் ஒருவர் யூடியூப் வீடியோ பார்த்து வீட்டிலேயே ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்.



இந்தோனேசியாவின் தலைநகராக உள்ள ஜகார்த்தா கடலில் மூழ்கி வருவதாக கூறி அந்த நாட்டு அரசு தலைநகரை மாற்றுவதாக அறிவித்து உள்ளது. இதை தவிர ஜகார்த்தாவில் உள்ள மற்றொரு முக்கிய பிரச்சினை போக்குவரத்து நெரிசல். வாகனங்களின் அதிகரிப்பால் அங்கு நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஜகார்த்தாவை சேர்ந்த ஜுஜுன் ஜுனேடி (வயது 42) என்பவர் தனக்கென சொந்தமாக வீட்டிலேயே ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். கார் மெக்கானிக்கான இவர் ஹெலிகாப்டரை வடிவமைப்பது எப்படி என்பது குறித்து யூடியூப் மூலமாக வீடியோக்களை பார்த்து கற்று தேர்ந்தார்.



அதன்பிறகு தனது கார் பழுது பார்க்கும் பணிமனையில் இருந்து காரின் உதிரிபாகங்கள் மற்றும் பழைய என்ஜின்கள் உள்ளிட்டவற்றை எடுத்து ஹெலிகாப்டர் செய்ய பயன்படுத்தினார். சுமார் ஓர் ஆண்டுகால ஓயாத உழைப்புக்கு பின் இறுதியாக தனது கனவான ஹெலிகாப்டரை ஜுஜுன் ஜுனேடி உருவாக்கினார். இந்த ஹெலிகாப்டரை தயாரிக்க 2 ஆயிரத்து 138 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1 லட்சத்து 53 ஆயிரம்) செலவிட்டதாக ஜுஜுன் ஜுனேடி கூறுகிறார்.

மேலும், பெட்ரோல் மூலம் இயங்கும், 8 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஹெலிகாப்டரை உருவாக்க தனது இளம் மகனும், தனது நண்பரும் தனக்கு உதவியதாக அவர் கூறினார். அனைத்து பணிகளையும் முடித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் ஹெலிகாப்டரில் பறந்து செல்வேன் என்று ஜுஜுன் ஜுனேடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News