ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் இல்லை: பக்தர்கள் மகிழ்ச்சி

Published On 2021-09-07 08:58 GMT   |   Update On 2021-09-07 08:58 GMT
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலிலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் இல்லை. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள்.

இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை தவிர ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த கோவிலில் முடிகாணிக்கை செலுத்த கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதில் ரூ.5 கோவில் நிர்வாகத்துக்கும், ரூ.5 முடி எடுக்கும் ஊழியருக்கும் வழங்கப்பட்டு வந்தது.

கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்கள் இதற்காக கோவில் அலுவலகத்தில் ரூ.10 செலுத்தி ரசீது மற்றும் முடிகாணிக்கை செலுத்த பிளேடை பெற்று செல்வார்கள். அந்த ரசீதை முடிகாணிக்கை செலுத்தும் இடத்துக்கு எடுத்துச்சென்று ரசீதை கொடுத்து முடிகாணிக்கை செலுத்துவது வழக்கம்.அதன்படி வாரத்தில் திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை 50 பேர் வரையிலும், வெள்ளி, சனிக்கிழமைகளில் 50 பேர் வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 150-க்கும் அதிகமானோர் என ஒவ்வொரு மாதமும் 1000 முதல் 1,500 பேர் வரை நேர்த்திக்கடனுக்காக முடிகாணிக்கை செலுத்துவது வழக்கம்.

ஆனால் தமிழக அரசு கோவில்களில் முடிகாணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என அறிவித்தது. அதன்படி இந்த அறிவிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலிலும் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. பக்தர்கள் நேரிடையாக முடிகாணிக்கை செலுத்தும் இடத்திற்கே சென்று முடிகாணிக்கை செலுத்தினர். முடிகாணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படாததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News