செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலை பார்சல்களை காணலாம்

நாகர்கோவிலுக்கு பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்த 100 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2021-10-12 05:48 GMT   |   Update On 2021-10-12 05:48 GMT
பார்சலில் வந்த 100 கிலோ குட்கா புகையிலையை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்ய திட்டமிட்டிருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இதனால் இளைய தலைமுறைகளின் எதிர்காலம் பாதிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை யில் இறங்கி உள்ளனர்.

கடந்த 12 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோர் கஞ்சா, குட்கா புகையிலை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நாகர்கோவிலுக்கு பார்சலில் குட்கா, புகையிலை வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நேற்று மாலை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். டெரிக் சந்திப்பு பகுதியில் கொரியரில் வந்த பார்சல்களை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பார்சல்களில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைகள் இருந்தது தெரிய வந்தது.

போலீசார் அங்கிருந்த 100 கிலோ குட்கா புகையிலைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்கா புகையிலைகள் பெங்களூருவில் இருந்து பார்சலில் வந்தது தெரிய வந்தது. பார்சலில் வந்த குட்கா புகையிலையை மாவட்டம் முழுவதும் சப்ளை செய்ய திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாகர்கோவில் பொதுப்பணித்துறை சாலையைச் சேர்ந்த ஜாண் மார்க்கோனி என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா புகையிலை பதுக்கல் வழக்கில் வேறு நபர்களுக்கு தொடர்பு உண்டா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Tags:    

Similar News