செய்திகள்
முருகன்

வேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து- முதலமைச்சருக்கு வக்கீல் புகார் மனு

Published On 2020-12-12 03:40 GMT   |   Update On 2020-12-12 03:40 GMT
வேலூர் ஜெயிலில் முருகன் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அவரது வக்கீல் புகழேந்தி முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
வேலூர்:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் உறவினர்களுடன் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி அவர் கடந்த 23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஏற்கனவே சிறை காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அவர் மீது பாகாயம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் மீது சிறை அலுவலர் மோகன் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) உயர் பாதுகாப்பு கட்டிடத்தில் அடைக்கப்பட்டுள்ள முருகன் அறையை சோதனையிட முதல்நிலை காவலர்கள் இருளப்பன், சரவணன், 2-ம் நிலை காவலர் சக்திவேல் மற்றும் பெண் காவலர் ஒருவர் கொண்ட குழுவினர் சென்றனர். அப்போது முருகன் காவலர்களை பணி செய்ய விடாமல் திட்டினார். மேலும் அவர் உடைகள் அணியாமல் இருந்தார். அறையில் இருந்த பொருட்களை காவலர்கள் மீது வீசி காவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது வக்கீல் புகழேந்தி கூறுகையில், முருகன் விடுதலையை தாமதப்படுத்த அவர் மீது வேண்டும் என்றே பொய் வழக்குகள் போடுகின்றனர். அவரின் காவி உடையை ஜெயில் அதிகாரிகள் பறித்து விட்டு, வெள்ளை உடையை அணிய கூறுகின்றனர். இதுவரை அவர் காவி உடையை தான் அணிந்து வந்தார். எனவே வேறு உடையை அணிய மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவரது அறையை சோதனை செய்ய சென்ற குழுவில் வேண்டும் என்றே பெண் காவலர் ஒருவரை இடம்பெற செய்துள்ளனர். ஆண்கள் ஜெயிலில் பெண் காவலரை பணியில் அமர்த்துவது தேவையற்றது. இதில் உள்நோக்கத்துடன் வேண்டும் என்றே பெண் காவலரை சோதனை பணியில் ஈடுபடுத்தி உள்ளனர் என்றார்.

இந்த நிலையில் வக்கீல் புகழேந்தி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சிறைத்துறை அதிகாரிகளுக்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

முருகன் கடந்த 29 ஆண்டுகளாக ஜெயிலில் இருந்து வருகிறார். முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான கோரிக்கை கவர்னர் கையெழுத்துக்காக நிலுவையில் உள்ளது. வேலூர் ஜெயிலில் முருகனை சிறை அதிகாரிகள் கொடுமைப்படுத்துவதாலும், அவரை மன நோயாளியாக மாற்ற அதிகாரிகள் முயற்சிப்பதாலும் அவர் 25 நாட்களாக தொடர்ந்து உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்து வந்தார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் மீது தற்போது ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை தனிமை சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகின்றனர்.

அவரை விடுதலை செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். அவரின் உடல்நிலை மிகவும் மோசமானதாக உள்ளது. அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். எனவே முருகனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நேற்றும் முருகன் 19-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
Tags:    

Similar News