செய்திகள்
கோப்புபடம்

முக்கியமான எந்த உறுப்பையும் விட்டுவைக்கவில்லை - கொரோனாவில் இருந்து மீளும் ஆண்களுக்கு அடுத்த அதிர்ச்சி

Published On 2021-06-18 08:25 GMT   |   Update On 2021-06-18 08:25 GMT
கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனா இப்படி எல்லாமா தாக்கும்...? என்று அடிக்கடி வெளிவரும் தகவல்கள் அதிர வைக்கின்றன.

கொரோனா தாக்கியவர்களை அதில் இருந்து மீட்பதற்காக மருத்துவத்துறை போராடுகிறது. பல்வேறு சிகிச்சை முறைகளை கையாண்டு கொரோனாவை அழித்து மக்களை காப்பாற்றினாலும் உடலுக்குள் அது முடிந்தவரை பல உறுப்புகளை சிதைத்து சின்னா பின்னமாக்கி விடுகிறது.

எனவே கொரோனாவில் இருந்து மீண்டாலும் அதன் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதே பெரும் சவாலாக ஆகிவிட்டது.

கொரோனாவில் இருந்து மீண்டாலும் உடலில் எங்கு வேண்டுமானாலும் ரத்தம் உறைதலை ஏற்படுத்தலாம். இதனால் உடலில் கை, கால் போன்ற உறுப்புகளை இழக்கவும் நேரிடலாம். இதயம் நின்றுபோகலாம். எனவே தொடர் மருத்துவ கண்காணிப்பு அவசியம் என்கிறார்கள்.

அதன்பிறகு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை வகையறாக்கள் தொற்றிக்கொள்ளும். அதுவும் கண்களை சேதப்படுத்தும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தும் என்று கண்டறிந்தனர். இப்போது அதற்கான மருந்துகளை கண்டுபிடித்து சிகிச்சை அளித்து போராடுகிறார்கள்.

இப்போது வெளிவந்துள்ள சில தரவுகளின் அடிப்படையில் கொரோனா ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது.

கொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணு செயல்பாட்டை சேதப்படுத்தும், விந்தணுக்களின் எண்ணிக்கை அளவு, மற்றும் இயக்கம் ஆகியவற்றில் 50 சதவீதம் வரை பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

விந்தணுக்களின் உற்பத்தி அல்லது பாலியல் ஹார்மோன்களின் உருவாக்கத்தை பாதிக்கும். இது வெறும் கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்தது என்றும் கூறிவிட முடியாது. கொரோனா பாதிப்பால் ஏற்படும் மனச்சோர்வு, மன அழுத்தங்களும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளாரகள்.

நோய் தொற்றின் தீவிரம் விந்தணுக்களின் தாக்கம் மிதமாகவோ அல்லது தீவிரமாகவோ இருந்தால் தற்காலிக ஆண்மைக்குறைவுக்கு வழி வகுக்கும். நிரந்தரமான சேதம் ஏற்படுமா? என்பது பற்றி தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்கள்.


பொதுவாக வைரஸ் காய்ச்சல்கள் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். ஆனால் ஆரோக்கியமானதும் சில வாரங்களில் எண்ணிக்கை பெருகி விடும். ஆனால் கொரோனாவால் இழந்த ஆண்மையை மீட்க எவ்வளவு காலமாகும் என்பதை உறுதிப்படுத்தவில்லை.

கொரோனாவில் இருந்து மீண்ட ஆண்களில் 10 முதல் 20 சதவீதம் ஆண்கள் விதைப்பை வலியை அனுபவிக்கிறார்கள். விதைப்பையில் வலி, வீக்கம், கட்டிகள் போன்ற நோய்களையும் ஏற்படுத்துகிறது. எனவே கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

Tags:    

Similar News