ஆன்மிகம்
மகாளய அமாவாசை

மகாளய அமாவாசை: திருவையாறு பகுதியில் உள்ள ஆறுகளில் புனித நீராட தடை

Published On 2020-09-12 09:43 GMT   |   Update On 2020-09-12 09:43 GMT
வருகிற 17-ந் தேதி(வியாழக்கிழமை) மகாளய அமாவாசை அன்று திருவையாறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் புனித நீராட தடை விதிக்கப்படுகிறது என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வருகிற 17-ந் தேதி(வியாழக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவையாறு வந்து புஷ்ய மண்டப படித்துறையில் புனித நீராடி தமது முன்னோர்களுக்கு திதி கொடுத்து செல்வார்கள். இதனால் கொரோனா தொற்று அதிகமாகி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

எனவே புஷ்ய மண்டப படித்துறையில் தர்ப்பணம் செய்யவும், திதி கொடுக்கவும் அனுமதிக்கக்கூடாது என்று திருவையாறு தாசில்தாரிடம் கிராம புரோகிதர் நல முன்னேற்ற சங்கத்தினர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக திருவையாறு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நெடுஞ்செழியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜகுரு, திருவையாறு பேரூராட்சி செயல் அலுவலர் ராஜா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

வருகிற 17-ந் தேதி மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புஷ்ய மண்டப படித்துறையில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி மற்றும் பிதுர் பூஜை செய்திடவும் தடை விதிக்கப்படுகிறது. இதேபோல் திருவையாறு பகுதியில் உள்ள ஆறுகளில் புனித நீராடவும் தடை விதிக்கப்படுகிறது. இதனையொட்டி திருவையாறு சரகத்தில் உள்ள 6 ஆற்று வழிகளும் மூடப்படுகிறது.

இது தொடர்பாக திருவையாறு பேரூராட்சி நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு விளம்பரம் செய்யவும், 6 வழிகளிலும் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள் வைக்கவும் தெரிவிக்கப்படுகிறது. திருவையாறு காவல்துறை சார்பாக தடுப்பு கட்டைகள் வைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எனவே 17-ந் தேதி பொதுமக்கள், புஷ்ப மண்டப படித்துறை மற்றும் இதர படித்துறைகளுக்கு செல்ல அனுமதி இல்லை எனவும், கூட்ட நெரிசலை தவிர்த்திடவும், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுத்திட சமூக இடைவெளியை கடைப்பிடித்திடவும் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News