செய்திகள்
சேலம் சூரமங்கலம் பகுதியில் மாநகராட்சி வாகனத்தில் காய்கறி விற்பனை நடைபெற்ற போது எடுத்த படம்.

சேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை

Published On 2020-06-30 09:14 GMT   |   Update On 2020-06-30 09:14 GMT
சேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேலம்:

சேலத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பில் இருந்தவர்கள் என கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தினமும் 5 வேளை கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஓமியோபதி மாத்திரைகள் மற்றும் வீடுகளை தூய்மையாக பராமரிப்பதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் பிளச்சிங் பவுடர் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை மாநகராட்சி அலுவலர்கள் தினமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களை சேகரித்து வருகின்றனர். 17 இடங்களில் வெளியாட்கள் உள்ளே செல்வதற்கும், அப்பகுதியில் வசிப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கோ அல்லது பிற எந்தவித நிகழ்விற்காகவும் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையொட்டி அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள், காய்கறிகள், பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சேலம் மாநகரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 17 இடங்களில் நேற்று மாநகராட்சி நிர்வாகத்தால் வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. எனவே கொரோனா வைரசை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

Similar News