செய்திகள்
அரசு பள்ளி மாணவிகள்

ஐ.ஐ.டி., ஜே.இ.இ. இலவச பயிற்சி: அரசு, உதவிபெறும் பள்ளி பிளஸ்-1 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்

Published On 2020-12-17 11:09 GMT   |   Update On 2020-12-17 11:09 GMT
ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி நுழைவுத் தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்காக டெல்லியில் உள்ள ‘நெக்ஸ்டு ஜென் வித்யா போர்ட்டல்’ நிறுவனத்துடன் பள்ளி கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக இலவசமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

உயர் கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்கள் எளிதாக சேர வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. கணிதம், இயற்பியல், வேதியியல், ஆகிய பாடங்களில் பயிற்சி வழங்கப்படும்.

பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களை பயிற்சி நடைபெறும்போதே கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இணையதளம் மூலமாக வருகிற 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை பதிவு செய்ய வேண்டும். பயிற்சி வகுப்புகள் ஜனவரி 4-ந் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:-

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி., ஜே.இ.இ. போட்டி நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதுபோன்ற நிலை மாறவேண்டும் என்பதற்காக அரசு பள்ளி மாணவர்கள் போட்டி தேர்வை சமாளிக்கும் ஆற்றலும் மன வலிமையும் ஏற்படுத்த இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, பிளஸ்-1 மாணவர்களும் பயிற்சி பெறலாம். பிளஸ் -1 மாணவர்களுக்கு மேலும் ஒரு வருடம் பயிற்சி பெற வாய்ப்பு உள்ளது. எனவே பிளஸ்-1 மாணவர்கள் அரசு நடத்தும் இலவச பயிற்சி வகுப்பை பயன்படுத்தி கொண்டு உயர்கல்வியை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News