செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

என்ஜினீயரிங் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Published On 2021-01-25 01:35 GMT   |   Update On 2021-01-25 01:35 GMT
என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடக்கும் என்று தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னை:

என்ஜினீயரிங் படிப்புகளுக்கான நவம்பர், டிசம்பர் இறுதி செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) தொடங்கி நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு எவ்வாறு நடைபெறும்? இதற்கு மாணவர்கள் எந்த முறையில் தயாராக வேண்டும்? என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? என்பது போன்ற தகவல்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருப்பதாவது:-

* இறுதி செமஸ்டர் தேர்வு அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக மாதிரி தேர்வு வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 18-ந் தேதி முதல் மார்ச் மாதம் 2-ந் தேதி வரை அரியர் மாணவர்களுக்கும், தொலைதூரக்கல்வி மாணவர்களுக்கும் தேர்வு நடைபெறும்.

* இந்த தேர்வு ஆன்லைன் மூலமாகவே நடக்கும். ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வு கொள்குறி வகை வினாக்களாக கேட்கப்படும். மொத்தம் 30 ஒரு மதிப்பெண், 15 இரண்டு மதிப்பெண் என மொத்தம் 60 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

* தேர்வர்கள் லேப்டாப், செல்போன், டேப்லெட், கம்ப்யூட்டர் வாயிலாக இணையதளம் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இணையதளம் வாயிலாக தேர்வு தொடங்கிய பிறகு ஒரு மணி நேரத்துக்கு தொடர்ந்து இணைப்பில் இருக்க வேண்டும். ஏதாவது கோளாறு காரணமாக தடை ஏற்பட்டால் 3 நிமிடத்துக்குள் மீண்டும் இணைந்து கொள்ளவேண்டும்.

* செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்வை எழுத இருப்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள். ஆகவே தேர்வர்கள் எந்தவிதமான முறைகேடுகளில் ஈடுபட்டாலும் கண்டுபிடிக்கப்படுவார்கள். தேர்வு எழுதும்போது வேறு இணையதளம், புத்தகம் பயன்படுத்த அனுமதி இல்லை. மற்ற நபரிடமும் தொடர்பு கொண்டு பதில் பெறக்கூடாது. தேவைப்படுமானால் ஏதாவது எழுதிபார்க்க ஏ4 அளவு தாள் பயன்படுத்தி கொள்ளலாம். முறைகேட்டில் தேர்வர்கள் ஈடுபட்டால் அதற்கான தண்டனையும் வழங்கப்படும்

மேலும் இதுகுறித்த பல்வேறு தகவல்கள் அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தின் https://aucoe.annauniv.edu/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம்.
Tags:    

Similar News