செய்திகள்

செந்துறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக முற்றுகை போராட்டம்

Published On 2019-05-14 17:25 GMT   |   Update On 2019-05-14 17:25 GMT
செந்துறை அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி 2-வது நாளாக முற்றுகை போராட்டம் நடத்திய பெண்கள் போலீசார் காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் கடந்த பல ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து அந்த கடையை மூடிய டாஸ்மாக் நிர்வாகம் பொன்குடிக்காடு கிராமத்தில் உள்ள விவசாய நிலப்பகுதியில் புதிய கடை திறக்க முயற்சி செய்தது. அதனை அப்பகுதி பெண்கள் போராட்டம் நடத்தி மூடினார்கள். அந்த போராட்டத்தை தொடர்ந்து அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தில் அப்போது மக்களின் எதிர்ப்பையும் மீறி விவசாய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் திடீரென டாஸ்மாக் கடை முன்பு திரண்டு அப்பகுதி பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், செந்துறை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து நேற்று உடையார்பாளையம் கோட்டாட்சியர் ஜோதி தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை முடிவில் 3 மாதத்தில் டாஸ்மாக் கடை மூடப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார். ஆனால் போராட்டக்காரர்கள் 10 நாட்களுக்குள் மூட வேண்டும் என்று கூறி வெளியேறினர். பின்னர் அங்கிருந்து டாஸ்மாக் கடைக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சில பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் காலில் விழுந்து இந்த கடையை உடனடியாக மூடுங்கள் என்றனர். இதையடுத்து விரைவில் டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
Tags:    

Similar News