செய்திகள்
பணம் மோசடி

வேலை வாங்கி தருவதாக கூறி பெருந்துறை வாலிபரிடம் ஆன் லைனில் ரூ.12 லட்சம் மோசடி

Published On 2021-03-13 07:39 GMT   |   Update On 2021-03-13 07:39 GMT
வேலை வாங்கி தருவதாக கூறி பெருந்துறை வாலிபரிடம் ஆன் லைனில் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருந்துறை:

பெருந்துறை அருகே உள்ள கம்புளியம்பட்டி அடுத்த தாசம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 32).

இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் ஆன்-லைன் மூலம் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து இருந்தார்.

இதையடுத்து உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து கோவிந்தராஜிக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசியவர் உ.பி. மாநிலத்தில் இருந்து அரவிந்த்குமார் பேசுகிறேன். நீங்கள் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து உள்ளீர்கள். பதிவு கட்டணமாக ரூ.3250 கட்ட வேண்டும் என கூறினார்.

இதையடுத்து கோவிந்தராஜ் அவரது வங்கி கணக்குக்கு ஆன்-லைன் மூலம் பணம் அனுப்பினார். தொடர்ந்து கோவிந்தராஜிடம் அடிக்கடி தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் பணம் அனுப்ப வேண்டும் என கூறினர். இதை நம்பி வேலைக்காக அடிக்கடி ரூ.3 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என மொத்தம் இதுவரை ரூ. 12 லட்சத்து 22 ஆயிரம் பணம் செலுத்தினார்.

இந்த நிலையில் கோவிந்தராஜ் அந்த தனியார் நிறுவனத்தை சேர்ந்தவருக்கு போன் செய்தார். ஆனால் போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கோவிந்தராஜ் பெருந்துறை போலீசில் புகார் செய்தார்.

அதில் ஆன்-லைனில் வேலை வாய்ப்புக்காக பணம் செலுத்தி உள்ளேன். ஆனால் அவர்கள் போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என கூறி உள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News