செய்திகள்
தக்காளி

தருமபுரியில் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை

Published On 2021-02-22 06:19 GMT   |   Update On 2021-02-22 06:19 GMT
தருமபுரியில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தருமபுரி:

தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்ட அள்ளி, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

இங்கு விளை விக்கப்படும் தக்காளியை விவசாயிகள், பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் நாள்தோறும் சுமார் 100 டன் வரை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் இருந்து சென்னை, பெங்களூர், ஓசூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து, பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக தக்காளி தேவை அதிகரித்ததால் கிலோ 25 முதல் 30 வரை விற்பனையானது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் மார்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.25 முதல் 30க்கும், 25 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.500 முதல் 600 க்கு விற்பனையானது. தற்போது தக்காளி வரத்து அதிகரித்துள்ளதால், விலை சரிந்து கிலோ ரூ.10க்கும், 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.250 என கடுமையாக விலை குறைந்துள்ளது. மேலும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அடிமட்ட விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

இந்த விலை சரிவால், தக்காளி அறுவடை செய்யும் கூலிக்கு கூட வருவாய் கிடைக்கவில்லை என தக்காளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.

Tags:    

Similar News