செய்திகள்
அஸ்வின், கோலி

கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் பட்டியலில் கோலி, அஸ்வின்

Published On 2020-11-25 02:39 GMT   |   Update On 2020-11-25 02:39 GMT
கடந்த 10 ஆண்டுகளில் உலகின் சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய வீரர்கள் கோலி, அஸ்வின் இடம் பெற்றுள்ளனர்.
துபாய்:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை தேர்ந்தெடுத்து கவுரவிக்க உள்ளது. இதன்படி கடந்த 10 ஆண்டுகளில் அசத்திய வீரர்களின் இறுதிக்கட்ட விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5 பிரிவுகளில் இடம் பெற்று பெருமை சேர்த்துள்ளார். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் உலகின் தலைச்சிறந்த வீரர் விருது, சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர் விருது, சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருது ஆகிய பிரிவுகளில் அவர் இடம் பிடித்துள்ளார்.

10 ஆண்டின் தலைசிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் கோலியுடன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின், ஜோ ரூட் (இங்கிலாந்து), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை) ஆகியோரும் உள்ளனர்.

சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் பட்டியலில் கோலி, ரோகித் சர்மா, டோனி (3 பேரும் இந்தியா), மலிங்கா (இலங்கை), மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா), டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா), சங்கக்கரா (இலங்கை), சிறந்த டெஸ்ட் வீரர் பட்டியலில் கோலி (இந்தியா), வில்லியம்சன் (நியூசிலாந்து), ஸ்டீவன் சுமித் (ஆஸ்திரேலியா), ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து), ஹெராத் (இலங்கை), யாசிர் ஷா (பாகிஸ்தான்), சிறந்த 20 ஓவர் போட்டி வீரர் விருது பந்தயத்தில் ரஷித்கான் (ஆப்கானிஸ்தான்), கோலி (இந்தியா), இம்ரான் தாஹிர் (தென்ஆப்பிரிக்கா), ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியா), மலிங்கா (இலங்கை), கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்), ரோகித் சர்மா (இந்தியா) ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.

உத்வேகமிக்க வீரருக்கான விருது பிரிவில் கோலியுடன், டோனி, மிஸ்பா உல்-ஹக் (பாகிஸ்தான்) உள்பட 9 பேர் மல்லுகட்டுகிறார்கள்.

இதே போல் கடந்த 10 ஆண்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலிராஜ் உள்பட 6 பேரும், சிறந்த ஒரு நாள் போட்டி வீராங்கனை விருதுக்கு இந்தியாவின் மிதாலிராஜ், கோஸ்வாமி உள்பட 6 பேரும் போட்டியிடுகிறார்கள்.

32 வயதான விராட் கோலி நிறைய சாதனைகள் படைத்துள்ளார். மூன்று வடிவிலான போட்டியிலும் 50 ரன்களுக்கு மேல் சராசரி வைத்துள்ள கோலி ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் விளாசியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளை கணக்கிட்டால் டெஸ்டில் 7 ஆயிரத்திற்கு அதிகமாகவும், ஒரு நாள் போட்டியில் 11 ஆயிரத்திற்கு அதிகமாகவும், 20 ஓவர் போட்டிகளில் 2,500 ரன்களுக்கு மேலாகவும் குவித்து வியக்க வைத்துள்ளார். இதில் வாக்குப்பதிவு அடிப்படையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News