தொழில்நுட்பம்
காவலன் எஸ்.ஓ.எஸ். செயலி

பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் காவலன் செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும்?

Published On 2019-12-18 09:14 GMT   |   Update On 2019-12-18 09:14 GMT
பெண்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கும் காவலன் எஸ்.ஓ.எஸ். செயலியை எப்படி பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.



தமிழகத்தில் பெண்களுக்கு ஆபத்து நேரத்தில் உதவுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் காவலன் செயலி தொடங்கப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிமுகம் செய்து வைத்தார். இருப்பினும் அது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் உடனடியாக விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில் தெலுங்கானாவில் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பிய பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலன் செயலி குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளும் காவலன் செயலியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் கூடுதல் கமி‌ஷனர்கள் பிரேம்ஆனந்த் சின்கா, தினகரன் ஆகியோரது மேற்பார்வையில் அனைத்து காவல் நிலையங்களிலும், இன்ஸ்பெக்டர்கள் காவலன் செயலி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அதிக நேரம் பயன்படுத்தினால் அது உடலுக்கும் மனதுக்கும் நல்லதல்ல என்று டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்து வரும் சூழ்நிலையில் அந்த செல்போனை இப்போது பெண்களை காக்கும் கவசமாக மாறி இருக்கிறது. பெண்கள் தங்களின் செல்போனில் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டால் ஆபத்தான நேரங்களில் உடனடியாக போலீசை உதவிக்கு அழைத்துகொள்ள முடியும்.

காவலன் செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ததும், காவலன் எஸ்.ஓ.எஸ். என்கிற பெயரில் செல்போனில் புதிய ஆப்ஷன் தோன்றும், அதில் சிகப்பு நிற பட்டன் போன்று காணப்படும் இடத்தில் அழுத்தினால் போதும் அடுத்த சில நிமிடங்களில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு போலீசார் உடனடியாக வருவார்கள்.

காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?

செல்போனில் பிளே ஸ்டோர் சென்று காவலன் என்று டைப் செய்ய வேண்டும். செயலியை பதிவிறக்கம் செய்பவரின் பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். அதனை பதிவு செய்ததும், ரத்த உறவு சம்பந்தப்பட்ட இருவரின் தொலைபேசி எண்களையும் பதிவு செய்ய வேண்டும். 

இதன்பிறகு 4 எண்கள் கொண்ட குறுஞ்செய்தி செல்போனுக்கு வரும் அதனை டைப் செய்ததும் காவலன் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுவிடும். நிமிடங்களில் காவலன் செயலியை மிகவும் எளிதாக யாருடைய துணையும் இன்றியே அனைவரும் பதிவு செய்து கொள்ளும் வகையில் உள்ளது.



பயன்படுத்தும் முறை

ஆபத்து நேரும் போது ஸ்மார்ட்போனில் காவலன் செயலியை திறந்தது எஸ்.ஓ.எஸ். சிகப்பு நிற பட்டனை அழுத்த வேண்டும். இவ்வாறு அழுத்தியதும் பாதிக்கப்பட்ட பெண்ணின் முகவரி, தொலைபேசி எண், போன்ற விவரங்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும்.

அடுத்த சில நிமிடங்களில் போலீசார் உதவிக்காக போன் செய்வார்கள். காவலன் செயலியில் உதவிக்காக மேலும் 2 எண்களையும் பெண்கள் பதிவு செய்து வைத்துக்கொள்ளலாம். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பற்றி உடனடியாக அந்த 2 செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி சென்றுவிடும்.

அந்த பெண்ணின் உறவினர்களும், போலீசாரும் உடனடியாக உதவிக்கு சென்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

காவலன் செயலியை பயன்படுத்தும் போது பாதிக்கப்பட்ட பெண் இருக்கும் இடத்தை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வசதியும் செயலியில் உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்படும் நபர் எந்த சூழ்நிலையில், எங்கு இருக்கிறார் என்பதையும் உடனடியாக அறிந்துகொள்ள முடியும். ஜி.பி.எஸ். உதவியோடு இந்த செயலி செயல்படுகிறது.
Tags:    

Similar News