உள்ளூர் செய்திகள்
விண்ணப்பம்

25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்- மாவட்ட கலெக்டர் தகவல்

Published On 2022-04-15 10:34 GMT   |   Update On 2022-04-15 10:34 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையற்ற 55 மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் மற்றும் 85 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2022-2023-ஆம் கல்வி ஆண்டுக்கு குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கல்வித்துறையின் rte.tnschoolsgov.in என்ற இணையதளத்தின் மூலமாக 20.04.2022 முதல் 18.05.2022 வரை இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவீத இடங்களை பள்ளியின் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி பிரிவு சேர்க்கைக்கு மாணவர்களுக்கு 31.07.2022 அன்று 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். மேலும் குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

குழந்தையின் வயதை நிரூபிப்பதற்கு (பிறப்புச் சான்று மருத்துவமனை சான்று, அங்கன்வாடி பதிவேடு நகல்) என ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மனுதாரரின் இருப்பிடத்திலிருந்து பள்ளி அமைவிடம் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இருக்க வேண்டும். இதற்கு இருப்பிடச் சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். மேலும், ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு கீழ் உள்ள அனைத்து பிரிவினரும் நலிவடைந்த பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்று சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின்கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பிரிவினர்களான ஆதரவற்றவர், மாற்றுத்திறனாளி குழந்தை, மூன்றாம் பாலினத்தவர், எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தை, துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தை போன்றோர்களுக்கு உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை பெற்று இணைய தளத்தில் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர்களின் பெற்றோர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு நலிவடைந்த பிரிவினரின் விண்ணப்பங்களுக்கான குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும். பெற்றோர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களிலுள்ள வட்டாரக் கல்வி அலுவலகங்கள், வட்டார வள மைய அலுவலகங்கள், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலகங்கள், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் ஆகிய அலுவலகங்களில் தாங்கள் சேர்க்க விரும்பும் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பான எல்.கே.ஜி சேர்க்கைக்காக விண்ணப்பங்களை 20.04.2022 முதல் 18.05.2022 வரை இணையதளம் வழியாக இலவசமாக பதிவேற்றம் செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News