ஆன்மிகம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நாளை பெரிய தேர்பவனி

Published On 2019-09-06 04:02 GMT   |   Update On 2019-09-06 04:02 GMT
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி நாளை நடக்கிறது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாகவும் வேளாங்கண்ணி மாதா பேராலயம் திகழ்கிறது. மாதாவின் பிறந்தநாள் 10 நாட்கள் ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பேராலய திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்று விழாவில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருவிழா நாட்களில் பேராலயம், விண்மீன் ஆலயம், பேராலய மேல்கோவில் மற்றும் கீழ்க்கோவில்களில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், கொங்கனி, மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சிலுவை பாதை வழிபாடு, ஜெப மாலை, நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் ஒவ்வொரு நாளும் இரவு 8 மணிக்கு தேர்பவனி நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நாளை (சனிக்கிழமை) இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது. 8-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்னையின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காலை 6 மணிக்கு சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. மாலை 6 மணிக்கு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

தேர் பவனியில் கலந்து கொள்ள பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் வருவார்கள். இதை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவாமல் தடுக்க காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் முகைதீன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட ரெயில்வே கோட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்பநாய் மூலமும் சோதனை செய்து வருகின்றனர்.

இதேபோல திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பைபர் படகு மற்றும் நீச்சல் வீரர்கள் உள்பட பாதுகாப்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கடலோர பாதுகாப்பு குழும கூடுதல் இயக்குனர் வன்னியபெருமாள் உத்தரவின்பேரில், போலீஸ் சூப்பிரண்டு சின்னசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 24 மணி நேரமும் கடற்கரையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர பகுதியில் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News