ஆன்மிகம்
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில்

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி தொடங்கியது

Published On 2021-09-09 04:26 GMT   |   Update On 2021-09-09 04:26 GMT
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் 150 கிலோ அளவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். ரத்னாவதி என்ற பெண்ணுக்கு சிவபெருமான், அவளது தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் பார்த்த தலம் என்பதால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமான சுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

கோவிலின் அடிவாரத்தில் மாணிக்க விநாயகர், மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையார், மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமி, மட்டுவார் குழலம்மையும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படும். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடைபெற உள்ளது. விழாவிற்காக 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த கொழுக்கட்டை 24 மணி நேரம் ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படுகிறது. இதற்காக தேங்காய், பச்சரிசி மாவு, உருண்டை வெல்லம், ஏலக்காய், நெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையிலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும் நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

ஆனால், கோவிலில் தினந்தோறும் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நடைபெறும். நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் கோவில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் மட்டும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News