செய்திகள்
கைது

டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது- துப்பாக்கிகள் பறிமுதல்

Published On 2021-10-12 05:42 GMT   |   Update On 2021-10-12 06:45 GMT
நவராத்திரி விழா தொடங்கி உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் பண்டிகை காலங்கள் வர இருப்பதை அடுத்து பயங்கரவாதிகள் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகையின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல்கள் நடைபெறலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு அனுப்பிய தகவலில் மாநிலத்தில் பாதுகாப்பை பல மடங்கு அதிகரித்து கண்காணிக்குமாறு வலியுறுத்தி உள்ளது.



இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து நாடு முழுவதும் பதுங்கி உள்ள பயங்கரவாதிகள் மற்றும் ஆதரவாளர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக தேடுதல் வேட்டைகளையும் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தலைநகர் டெல்லியில் பதுங்கி இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளான். டெல்லியின் லட்சுமி நகர் அருகே ரமேஷ் பார்க் பகுதியில் பயங்கரவாதி பதுங்கி இருப்பதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த போலீசார் இன்று காலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதியை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவனது பெயர் முகமது அஷ்ரப் என்கிற அலி என்பது தெரிய வந்தது. இவன் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவன். அவன் போலி இந்திய அடையாள அட்டையுடன் டெல்லியில் தங்கி இருந்துள்ளான்.

அவனிடம் இருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 60 தோட்டாக்கள், ஒரு கையெறி குண்டு, 2 பிஸ்டல் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

நவராத்திரி விழா தொடங்கி உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவன் மிகப்பெரிய நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்ததாகவும் தெரிகிறது. தற்போது பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளதால் நாசவேலை முறியடிக்கப்பட்டு உள்ளது.


Tags:    

Similar News