செய்திகள்
கலெக்டர் ஜெயகாந்தன்

கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை - கலெக்டர் ஜெயகாந்தன் தகவல்

Published On 2020-10-17 14:34 GMT   |   Update On 2020-10-17 14:34 GMT
அரசின் நிர்ணய விலையை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 70 ஆயிரம் எக்டோ் பரப்பில் நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்நோக்கும் நெல் பருவத்தை கருத்தில் கொண்டு யூரியா 3,139 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி. 770 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ் 819 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 1, 879 மெட்ரிக் டன்களும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும், தனியார் உர விற்பனை நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மாத தேவைக்கான உள் ஒதுக்கீடாக 5,625 மெட்ரிக்டன் யூரியா, 1,500 மெட்ரிக் டன் டி.ஏ.பி., 790 மெட்ரிக் டன் பொட்டாஷ் மற்றும் 2,200 மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவையான அளவு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் யூரியா 45 கிலோ மூடை ஒன்றிற்கு ரூபாய் 266.50-க்கும், இப்கோ, கிரிப்கோ மற்றும் ஐ.பி.எல்.-ன் டி.ஏ.பி. உரங்கள் 50 கிலோ மூடை ஒன்றிற்கு ரூ.1,200-க்கும், ஐ.பி.எல். பொட்டாஷ் ரூ. 875-க்கும், இப்கோ, கிரிப்கோ மற்றும் ஐ.பி.எல். காம்ப்ளக்ஸ் உரங்கள் ரூ.975-க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்றாலோ, வேறு மாவட்டத்திற்கு உரத்தை கடத்தினாலோ, விற்பனை முனைய எந்திரம் மூலம் விவசாயிகளுக்கு உர விற்பனை செய்யவில்லை என்றாலோ, உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985 மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News