செய்திகள்
மறியல்

பூவன்விளை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்

Published On 2019-09-25 12:28 GMT   |   Update On 2019-09-25 12:28 GMT
சாத்தான்குளம் அருகே பூவன்விளை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே இடைச்சிவிளையை அடுத்த பூவன்விளை கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் ஆழ்துளை கிணறு மூலமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தண்ணீர் கிடைக்காமல் கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவெண்டும் என கோரி இடைச்சிவிளையில் திசையன்விளை- உடன்குடி மெயின்ரோடு சந்திப்பில் பூவன்விளை கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்ததும் சாத்தான் குளம் தாலுகா துணை தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வி மற்றும் தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதிகாரிகளிடம் கிராம மக்கள் தங்களது பகுதியில் கூடுதலாக போடப்பட்ட ஆழ்துளை கிணற்றில் போதுமான தண்ணீர் இல்லை.

எனவே முறையாக தண்ணீர் கிடைக்க வேறு வழிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். துணை தாசில்தார் சுவாமிநாதன் கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தட்டுப்பாடின்றி தண்ணீர் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் அதிகாரிகளின் உறுதியை ஏற்று பெண்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News