செய்திகள்
நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் பனிப்பொழிவுக்கு இடையே பஸ் ஊர்ந்து செல்லும் காட்சி.

நெல்லை மாவட்டத்தில் காலை நேரத்தில் நிலவும் கடும் பனிமூட்டம்

Published On 2019-11-11 04:34 GMT   |   Update On 2019-11-11 04:34 GMT
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலையும் அதிகளவு பனி மூட்டம் காணப்பட்டது. இந்த பனி மூட்டம் காலை 7 மணி வரை இருந்தது.
நெல்லை:

வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழை வரை பெய்கிறது.

நெல்லை, தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை தொடங்கிய போது தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை கொட்டியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

குண்டாறு, அடவிநயினார், கருப்பாநதி, ராமநதி, கடனாநதி உள்ளிட்ட அணைகள் நிரம்பின. பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகளின் நீர்மட்டம் 130 அடியை தாண்டியது. இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீர்மட்டம் 130.95 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 136.32 அடியாகவும் இருக்கிறது.

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 63.30 அடியாக உள்ளது. பாபநாசம் அணைக்கு 491 கன அடியும், மணிமுத்தாறு அணைக்கு 71 கன அடியும் தண்ணீர் வந்தபடி இருக்கிறது. பாபநாசம் அணையில் இருந்து 1159.75 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மழை பெய்யவில்லை. ஆனால் பல இடங்களில் பகல் நேரத்தில் மேகமூட்டமாகவே இருக்கிறது. அவ்வப்போது வெயிலும் அடிக்கிறது.

அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவின் காரணமாக அதிக குளிர் நிலவி வருகிறது. அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கிறது. வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தான் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே பனிப்பொழிவு உள்ளது. கடந்த 4 நாட்களாக இந்த நிலை நீடித்தது.

இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகளவு பனி மூட்டம் காணப்பட்டது. இந்த பனி மூட்டம் காலை 7 மணி வரை இருந்தது. பல பகுதிகளில் ரோட்டில் எதுவும் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் மிக அதிகமாக இருந்தது.

நெல்லை-தென்காசி நெடுஞ்சாலையில் இன்று காலை எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதனால் பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்கை எரிய விட்டப்படி சாலையில் சென்றன.

அரசு ஒன் டூ ஒன் பேருந்துகள் சாலையில் மிதமான வேகத்திலேயே சென்றன. மேலும் நெடுஞ்சாலை ஓரங்களில் பல்வேறு பகுதியில் இருந்து கார்களில் வந்தவர்கள் பனி விலகும் வரை காரை ஓரமாக நிறுத்திவிட்டு சிறிது நேரத்திற்கு பின் புறப்பட்டு சென்றனர். பலர் பனிப்பொழிவுக்கு இடையே நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

கேரளாவில் மூணாறு பகுதியில் நிலவும் பனிப்பொழிவு போல் இங்கு இருப்பதாக வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்தனர். இந்த உச்சக்கட்ட பனிப்பொழிவினால் அதிகாலையில் பணிக்கு செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளானார்கள். சீதபற்பநல்லூர் பகுதியில் நிலவிய பனிமூட்டத்தால் ரோட்டோரத்தில் இருக்கும் கட்டிடங்கள் எதுவும் தெரிய வில்லை.

நெல்லையில் வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. நெல்லை மாநகர் பகுதிகளான பாளை, வண்ணார்பேட்டை, நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், சங்கர்நகர் மற்றும் நான்கு வழிச்சாலை பகுதிகளிலும் அதிகளவு பனி பொழிவு காணப்பட்டது.
Tags:    

Similar News