ஆன்மிகம்
ஐராவதேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி

தம்பதியர் ஒற்றுமை காக்கும் ஐராவதேஸ்வரர் ஆலயம்

Published On 2019-09-05 01:33 GMT   |   Update On 2019-09-05 01:33 GMT
நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பெரையார் சாலையில் உள்ளது சுமார் 1300 ஆண்டுகள் பழமையான ஐராவதேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமியிடம் இருந்து துர்வாச முனிவருக்கு ஒரு மலர் மாலை கிடைத்தது. அந்த மாலையை அவர், இந்திரனிடம் கொடுத்தார். ஐராவதம் என்ற வெள்ளை யானையின் மீது அமர்ந்தபடியே அந்த மாலையை வாங்கிய இந்திரன், மாலையை ஐராவதத்தின் தலை மீது வைத்தான்.

ஆனால் அந்த யானையோ, அந்த மாலையை தும்பிக்கையால் எடுத்து சுழற்றி தூக்கி வீசி எறிந்தது. இதனைக் கண்ட துர்வாச முனிவர் கடும் கோபம் கொண்டார். மேலும் “தேவலோகத்தில் வாழும் தகுதியை இழந்து, காட்டில் காட்டு யானையாக சுற்றித் திரிவாய்” என்று ஐராவதத்திற்கு சாபமும் கொடுத்தார். அதன்படி அது பூலோகம் வந்து காட்டு யானையாகத் திரியத் தொடங்கியது.

தனது சாபம் நீங்க ஐராவதம் பல சிவ தலங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டது. அதன் பலனாக அதன் சாபம் நீங்கியது. அதன் ஒரு பகுதியாக ஐராவதம் யானை மடப்புரம் என்ற தலத்திற்கும் வந்து இங்குள்ள இறைவனையும் வழிபட்டுள்ளது. எனவே மடப்புரத்தில் அருள்பாலிக்கும் இறைவன் ‘ஐராவதேஸ்வரர்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இங்கு வீற்றிருக்கும் இறைவியின் பெயர் அகிலாண்டேஸ்வரி.

இந்த ஐராவதேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்து உள்ளே நுழைந்ததும் விசாலமான பிரகாரம் காணப்படுகிறது. அதன் எதிரே நந்தியம்பெருமானும், பலிபீடமும் இருக்கிறது. அடுத்துள்ள மகாமண்டபத்தில் வலதுபுறம் இறைவி அகிலாண்டேஸ்வரியின் சன்னிதி உள்ளது. அன்னை நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னையின் வலதுகரத்தில் சக்கராயுதம் இருக்க, அன்னை தன் தலையை சற்றே வலப்புறம் சாய்த்தவாறு காட்சி தருகிறாள். முகத்தில் புன்னகை தவழ அருள்பாலிக்கும் அன்னையை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அத்தனை அழகு.

அம்பாள் சன்னிதியின் எதிரே கருவறையில் இறைவன் ஐராவதேஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருக்கிறார். கருவறை தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, சிவ துர்க்கை ஆகியோர் திருமேனி உள்ளது. ஆலயத்தின் திருச்சுற்றில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர், பைரவர், சனீஸ்வரர், நாகராஜர், நாகர், சூரியன் ஆகியோர் விற்றிருந்து அருள்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் திருவிழாக்களுக்குப் பஞ்சமில்லை. வைகாசி விசாகத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் இங்கு வெகு பிரசித்தம். ஐப்பசியில் கந்தசஷ்டி விழா ஆறு நாட்கள் வெகு விமரிசையாக நடக்கிறது. ஆறாவது நாள் அம்பு போடும் உற்சவம் நடைபெறும். திருக்கல்யாண உற்சவத்தின் போது முருகப்பெருமானுக்கு சீர்வரிசை செய்து, மணமாலை சாத்தி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு அடுத்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறுவது நிச்சயம் என்கிறார்கள்.

இத்தல இறைவனுக்கு சிவராத்திரியில் நான்கு கால பூஜையும், ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகமும் சிறப்பாக நடத்தப்படுகிறது. கார்த்திகை மாத சோமவார நாட்களில் இறைவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மூன்றாவது சோமவாரம் அன்று இறைவனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும்.

மாதந்தோறும் வரும் பிரதோஷங்கள் பல நூறு பக்தர்கள் சூழ வெகு சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் 30 நாட்களும் இறைவன், இறைவிக்கு தனுர்பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனை தினம் ஒரு அலங்காரம் செய்து வைத்திருக்கும் காட்சியை காணவே கண் கோடி வேண்டும்.

ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை அம்மன் சன்னிதியில் நடைபெறும் விளக்கு பூஜையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெறுவர். அன்னை அகிலாண்டேஸ்வரிக்கு மூன்று வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து 9 எலுமிச்சைப் பழத்தில் விளக்கு ஏற்றி வழிபட குடும்ப ஒற்றுமை வளரும்.

விநாயகர் சதுர்த்தி அன்று விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதுடன், சன்னிதியின் முன் கணபதி ஹோமமும் நடத்தப்படுகிறது. விநாயகப் பெருமானுக்கு 108 விடலை தேங்காய் விட்டு பிரார்த்தனை செய்தால் நினைத்த காரியம் கைகூடும்.

நடராஜப் பெருமானுக்கு திருவாதிரை, திருமஞ்சன நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. சனிப்பெயர்ச்சியின் போது சனிபகவான் முன்பும், குருப்பெயர்ச்சியின்போது தட்சிணாமூர்த்தி முன்பும் ஹோமம் வளர்த்து அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது.

மாட்டுப்பொங்கல் அன்று ஊரில் உள்ள மாடுகள் அனைத்தும் கோவிலின் முன் உள்ள திடலில் கூடும். மாடுகளுக்கு தீபாரதனை காட்டுவார்கள். பின் ஊர் மக்கள் அனைவரும் கூட்டமாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அங்கு உள்ளோரை வாழ்த்திவிட்டு வருவார்கள். முதியோர்களிடம் ஆசி பெற்று திரும்பும் காட்சி எங்கும் காண இயலாத காட்சியாகும்.

ஆலயத்தின் வடக்கு பிரகாரத்தில் ஓர் அழகிய வசந்த மண்டபம் உள்ளது. தங்கள் வீட்டு நிச்சயதார்த்தம், காது குத்துதல், சீமந்தம், திருமணம், திருமண வரவேற்பு போன்ற அனைத்து சுப காரியங்களை இந்த மண்டபத்திலேயே நடத்துகின்றனர். இதனால் அவர்களுக்கு பொருட்செலவு மிகவும் குறைவதுடன் அலைச்சலும் மிச்சமாகிறது. இந்த மண்டப பயன்பாட்டிற்கு அவர்கள் ஆலயத்திற்கு ஒரு சிறு தொகையை காணிக்கையாக தந்து மகிழ்கின்றனர்.

சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், ஊர் மக்களின் பெரு முயற்சியாலும், இந்து அறநிலையத் துறையின் ஒத்துழைப்பாலும் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

மடத்து குளம்

ஆலயத்தின் எதிரே உள்ளது மடத்து குளம் என அழைக்கப்படும் ஆலய தீர்த்தக் குளம் உள்ளது. இந்த குளத்தின் மேற்குப்பகுதியில் ஒரு கட்டிடம் மடமாக இருந்தது. அதில் மரத்தடி சாமியார் என்ற ஒரு சாமியார் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்த புளியமரத்தின் கீழ் ஒரு கீற்றுக்கொட்டகை அமைத்து, சிலைகளை பிரதிஷ்டை செய்து, அந்த சிலைகளுக்கு 1888 -ம் ஆண்டு வரை பூஜை செய்து வந்தார். அவரது மறைவுக்குப்பின் காலப்போக்கில் கட்டிடம் இருந்த இடம் தெரியாமல் இடிந்து போய்விட்டது.

பின்னர் அந்த சிலைகளும் இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். இது செவி வழி தகவல். இதனாலேயே இத்திருக்குளம் மடத்துக்குளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஊரெல்லாம் வறட்சி ஆக்கிரமிப்பு செய்திருந்த காலகட்டங்களில் கூட இந்தக் குளத்தில் நீர் ததும்பி காணப்பட்டது என்பது சிலிர்க்க வைக்கும் உண்மை.

அமைவிடம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை - பெரையார் சாலையில் செம்பனார் கோவிலுக்கு கிழக்கே உள்ளது காளஹஸ்தி நாதபுரம். இந்த ஊரில் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால் மடப்புரம் கிராமத்தை அடையலாம்.
Tags:    

Similar News