செய்திகள்
கடற்கரை சாலையில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

நாளை புதுச்சேரி விடுதலை நாள்: போலீசார் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகை

Published On 2020-10-30 21:48 GMT   |   Update On 2020-10-30 21:48 GMT
புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி போலீசார் இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி விடுதலை நாள் விழா நாளை (ஞாயிற்றுக் கிழமை) கடற்கரை சாலையில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார்.

இதற்காக காலை 8.59 மணிக்கு அவர் விழா நடக்கும் காந்தி சிலை அருகே வருகிறார். அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்கின்றனர்.

தொடர்ந்து விழா மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்துகிறார். அதன்பின் போலீஸ் அணிவகுப்பினை பார்வையிடுகிறார்.

பின்னர் மேடைக்கு திரும்பும் முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுதலை நாள் உரையாற்றுகிறார். தொடர்ந்து போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.

அதன்பின் கடற்கரை காந்தி திடலில் நடைபெறும் புதுச்சேரி வரலாறு புகைப்பட கண்காட்சியை அவர் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து சட்டசபைக்கு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி அங்கேயும் தேசியக் கொடியேற்றுகிறார்.

இதற்கான இறுதிகட்ட அணிவகுப்பு ஒத்திகையில் போலீசார் நேற்று ஈடுபட்டனர். இந்த விடுதலை நாள் விழாவில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை மட்டும் இடம்பெறுகிறது.

வழக்கமாக நடைபெறும் மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுவை விடுதலை நாளையொட்டி சட்டசபை மற்றும் அரசு கட்டிடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
Tags:    

Similar News