செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் மேல்சபை கலைப்பு- மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல்

Published On 2020-01-27 09:01 GMT   |   Update On 2020-01-27 09:01 GMT
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று காலை நடந்த மந்திரி சபை கூட்டத்தில் மேல்சபையை கலைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

விஜயவாடா:

ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சரானார்.

சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது ஆந்திரா மாநிலத்துக்கு புதிய தலை நகராக அமராவதியை உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்காக மிக பிரமாண்டமான சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி அரசு அமராவதி திட்டத்தை ரத்து செய்ய முடிவெடுத்தது.

புதிதாக 3 தலைநகரங்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். கவர்னர் மாளிகை தலைமை செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் விசாகப்பட்டினத்தில் செயல்படும். கர்னூல் நகரில் கோர்ட்டுகள் அனைத்தும் இயங்கும்.

அமராவதி திட்டத்தை ரத்து செய்தல், 3 தலை நகரங்களை உருவாக்குதல் ஆகிய 2 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த மசோதாக்கள் சட்ட மேலவைக்கு அனுப்பப்பட்டன. மேல்சபையில் தெலுங்குதேச கட்சியின் உறுப்பினர்கள்தான் மெஜாரிட்டியாக உள்ளனர். இதனால் 2 மசோதாக்களையும் ஆளும் கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை.

அப்படி நிறைவேற்றாமல் திருப்பி அனுப்பினால் சட்டசபையில் மீண்டும் அதை வலியுறுத்தி நிறைவேற்றலாம். ஆனால் மேல் சபை தலைவர் செரீப் தெலுங்குதேசத்தை சேர்ந்தவர் என்பதால் அப்படி செய்யாமல் தேர்வுக் குழுவுக்கு அனுப்பினார். அந்த குழு பரிசீலித்து மேல வைக்கு திருப்பி அனுப்ப பல நாட்களாகும்.

இதனால் முதலமைச்சர் ஜெகன்மோகன் கடும் கோபம் அடைந்தார். 3 தலைநகரங்களை கொண்டு வருவதற்காக அவர் மேல் சபையை கலைக்க முடிவு செய்தார்.

இந்த நிலையில் ஆந்திராவில் மேல்சபை கலைக்கப்படுகிறது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று காலை நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

ஏற்கனவே 3 தலைநகர் விவகாரத்தால் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தற்போது சட்டபேரவை மேலவையை கலைக்கப் பட்டதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News