செய்திகள்
கைதான வாலிபர்

நகைக்காக மூதாட்டி கொலை - கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்து மிரட்டிய கொலையாளி கைது

Published On 2019-11-28 10:24 GMT   |   Update On 2019-11-28 10:24 GMT
5 பவுன் நகைக்காக வீடு புகுந்து மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள அன்னகாமு தோட்டத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது மனைவி காவேரி (வயது65). துரைச்சாமி ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு சக்திராஜன் என்ற வளர்ப்பு மகன் உள்ளார்.

அவர் தனியாக வசித்து வந்த நிலையில் காவேரி வீட்டின் முன்பகுதியில் சிறிய கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் காவேரி கடையை அடைத்து விட்டு வீட்டுக்குள் சென்று விட்டார்.

அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் காதர்ஷா ஒலி (35) என்பவர் வீட்டின் கதவை தட்டியுள்ளார். உடனே காவேரி வெளியே வந்து விசாரித்தபோது காதர்ஷா ஒலி தனக்கு முட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார்.

உடனே காவேரி முட்டை எடுப்பதற்காக சென்றபோது திடீரென காதர்ஷா ஒலி காவேரி அணிந்திருந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்றுள்ளார். அப்போது காவேரி சத்தம்போட்டதும் அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவேரியை சரமாரியாக குத்தி உள்ளார்.

கை, மார்பு, கழுத்து உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து விழுந்ததால் காவேரி கதறி துடித்தபடி வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

உடனே காதர்ஷா ஒலி காவேரியின் வீட்டுக்குள் பதுங்கினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த காவேரியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அந்த பகுதி மக்கள் அனுப்பினர். ஆனால் சிகிச்சை பலனின்றி காவேரி இறந்து விட்டார்.

காவேரியின் வீட்டுக்குள் பதுங்கிய கொலையாளியை பிடிப்பதற்காக பொதுமக்கள் வீட்டுக்குள் தேடினர். அப்போது சமையல் அறைக்குள் இருந்த கியாஸ் சிலிண்டரை பற்ற வைத்த காதர்ஷா ஒலி, என் அருகே யாரும் வரக்கூடாது. அப்படி வந்தால் கியாஸ் சிலிண்டரை வெடிக்க வைத்துவிடுவேன் என்று மிரட்டினார். இதனால் பொதுமக்களும் திகைத்தப்படி நின்றனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் விரைந்து சென்றனர். தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது. கியாஸ் சிலிண்டரில் பற்ற வைக்கப்பட்ட தீயை அணைத்ததும் போலீசார் உள்ளே சென்று பரண்மேல் பதுங்கி இருந்த காதர்ஷா ஒலியை கைது செய்தனர்.

கைதான காதர்ஷா ஒலி மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான காதர்ஷா ஒலிக்கு மனைவி, 2 மகள்களும் உள்ளனர். மனைவி, மகள்களும் வெளியே சென்றிருந்த நேரத்தில்தான் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

5 பவுன் நகைக்காக காவேரி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடு புகுந்து மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் மதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags:    

Similar News