ஆன்மிகம்
திருப்பதி வெங்கடாசலபதி சார்பில் அனுப்பி வைத்த பட்டு வஸ்திரத்தை, சமர்ப்பித்து, சாமி தரிசனம் செய்தபோது எடுத்தபடம

அத்திவரதருக்கு திருப்பதி வெங்கடாசலபதி அனுப்பிய பட்டு வஸ்திரம்

Published On 2019-07-17 04:12 GMT   |   Update On 2019-07-17 04:12 GMT
காஞ்சீபுரம் அத்திவரதருக்கு, திருப்பதி வெங்கடாசலபதி அனுப்பிய பட்டு வஸ்திரத்தை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி சமர்ப்பணம் செய்தார்.
காஞ்சீபுரம் அத்திவரதருக்கு, திருப்பதி வெங்கடாசலபதி அனுப்பிய பட்டு வஸ்திரத்தை, திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி சமர்ப்பணம் செய்தார்.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் காஞ்சீபுரம் வருகை

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய அத்திவரதர் ஜூலை 1-ந்தேதியில் இருந்து 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். தினமும் ஒவ்வொரு நிறத்திலான பட்டு வஸ்திர அலங்காரத்தில் அத்திவரதர் அருள் பாலித்து வருகிறார்.

அத்திவரதர் தரிசனத்தின் 16-வது நாளான நேற்று திருப்பதி வெங்கடாசலபதி, அத்திவரதருக்கு அனுப்பிய பட்டு வஸ்திரம் சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் வசந்த மண்டபத்தில் நடந்தது. அதற்காக, திருப்பதியில் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் டாலர் சேஷாத்திரி, பேஷ்கார் லோகநாதம் மற்றும் அதிகாரிகள் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்தனர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அதிகாரிகளை, காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் அறநிலையத்துறை அதிகாரி தியாகராஜன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

திருப்பதி வெங்கடாசலபதி சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட மங்கள பொருட்களான மஞ்சள், குங்குமம், சந்தனம், துளசி மாலை, தாமரை மலர்கள் மற்றும் விலை உயர்ந்த பட்டு வஸ்திரம் ஆகியவற்றை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தன்னுடைய தலையில் சுமந்தபடி மேள தாளம் முழங்க ஊர்வலமாக வந்து, அத்திவரதருக்கு சமர்ப்பணம் செய்தார்.

அந்தப் பொருட்களை, வரதராஜபெருமாள் கோவில் பிரதான அர்ச்சகர்கள் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு சாமி தரிசன ஏற்பாடுகளை, கோவில் அதிகாரிகள் செய்து வைத்தனர். அவர்களுக்கு துளசி, பிரசாதங்களை கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் வழங்கினர்.

அதைத்தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவினர், காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை, காமாட்சியம்மன் கோவில் மேலாளர் ஸ்ரீஹரியன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். திருப்பதி வெங்கடாசலபதி, காமாட்சியம்மனுக்கு அனுப்பி வைத்த பட்டு வஸ்திரத்தை, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி, காமாட்சியம்மன் கோவில் மேலாளரிடம் வழங்கினார். அவர்களுக்கு, கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News