லைஃப்ஸ்டைல்
வெளியே செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்...

வெளியே செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்...

Published On 2020-11-06 08:14 GMT   |   Update On 2020-11-06 08:14 GMT
வெளி இடங்களுக்கு அன்றாடம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நாம் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பு வழிமுறைகளை கவனமாக பின்பற்றி சென்று வந்தோமானால் நோயைக் கண்டு பயப்பட தேவையில்லை.
கொரோனா தொற்றுக்குப் பயந்துகொண்டு அத்தியாவசிய தேவைகளுக்காகக் கூட வெளியில் செல்லாமல் எப்படி இருப்பது ? மருத்துவமனைகள், வங்கிகள், கடைகள், அலுவலகங்கள் என எல்லா இடங்களுக்கும் அன்றாடம் செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் நாம் வெளியில் செல்லும் பொழுது பாதுகாப்பு வழி முறைகளை கவனமாக பின்பற்றி சென்று வந்தோமானால் நோயைக் கண்டு பயப்பட தேவையில்லை.

எங்கே வெளியில் செல்வதாக இருந்தாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை மறக்கவே கூடாது. உடைகள் அணியும் போது அதற்கு ஏற்றாற் போல் அழகிய வண்ணங்களிலும், வாசகங்கள் எழுதப்பட்டது போன்றும், அழகிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டது போன்றும் முகக்கவசங்கள் வந்து விட்டன. முகக்கவசம் அணிவதை பெரிய பாரமாக எண்ணாமல், ஜாலியாக அணிந்து கொண்டு செல்ல ஆரம்பித்த விட்டால் நம்முடைய பாதுகாப்புக்கு நூறு சதவிகிதம் நாம் பொறுப்பாளி ஆகிவிடுகின்றோம்.

* சாதாரணமாகவே வெளிநாடுகளில் சிறிய ஜுரம், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் அவர்களாகவே முகக்கவசங்களை அணிந்து கொள்கிறார்கள். இதனால் நமக்கிருக்கும் இருமல், சளி போன்றவை அடுத்தவர்களுக்கும் எளிதில் பரவாது.

* இப்பொழுது ஒரு வங்கிக்குச் செல்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு செல்வது, அனைத்து கவுன்டர்களிலும் போய் ஒட்டிக்கொண்டு நிற்பது போன்றவற்றை தவிர்த்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கலாம்.

* பண்டிகை நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரத்துவங்கிவிட்டது புதுத்துணிகள் எடுக்க வேண்டியுள்ளது. சரி கடைகளுக்குச் சென்று துணிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையில் நாமே அனைத்துத் துணிகளையும் எடுத்துப் பார்ப்பது, வைப்பது என்றில்லாமல் விற்பனையாளரிடம் குறிப்பிட்ட வண்ணம் மற்றும் டிசைனைக் கூறியோ அல்லது துணிகளைக் சுட்டிக்காட்டியோ அவற்றை எடுத்துப் போடச் சொல்லலாம்.

எங்கு சென்றாலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நல்லது. கடைகளிலும் அனைத்துப் பொருட்களையும் கைகளில் எடுத்துப் பார்ப்பது மேசைகள், நாற்காலிகள் மற்றும் ஷோபாக்கள் போன்றவற்றைத் தொடுவது என்றில்லாமல் முடிந்தவரை எட்டநின்று வாங்குவது நல்லது. நம் பையிலேயே ஒரு சிறிய சானிடைசர் பாட்டிலைக் கொண்டு சென்றோமானால் தேவையான பொழுது கைகளைச் சுத்தப் படுத்திக் கொள்ளலாம்.

இப்பொழுது பெரும்பாலான ஜவுளிக்கடைகளில் இணையதளம் மூலம் விற்பனையாளர்கள் நாம் குறிப்பிடும் சேலைகள் மற்றும் துணி வகைகளை நமக்கு எடுத்துக் காண்பிக்கிறார்கள். நாம் தேர்வு செய்து வைக்கும் துணிகளை கொரியர் மூலமும் நமது வீடுகளுக்கே அனுப்பி வைக்கும் சேவையையும் துவங்கி உள்ளார்கள். எல்லா வீடுகளிலுமே அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் இருப்பார்கள். அவர்களை துணிக்கடைகளுக்கு அழைத்துக் கொண்டு போக இயலாது. இதற்கென்றே இணையதள விற்பனைச் சேவையை ஜவுளிக் கடைகள் துவங்கியுள்ளன. முன்கூட்டியே தொலைபேசி மூலம் நியமனம் ( அப்பாயின்மென்ட்) பெற்றுக் கொண்டு நம் வீட்டுக் கணினி மூலம் அட்டகாசமாக ஷாப்பிங் செய்து விடலாம். இப்படி அப்பாயின்மென்ட் பெறுவதன் மூலம் கடைக்காரர்கள் நமக்கென்று பிரத்தியேகமாக விற்பனைப் பிரதிநிதியை நியமிக்கிறார்கள். அவர்கள் நமக்குத் தேவையான துணிமணிகளை பொறுமையாகவும் இன்முகத்துடனும் காண்பிக்கிறார்கள்.

* பாத்திரக் கடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்குச் சென்று வாஷிங்மெஷின், ஃபிரிட்ஜ், ஏசி என ஏதாவது ஒன்றை வாங்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கடைகளில் சென்று பல மாடல்களைப் பார்க்கிறோம். முடிந்தவரை எந்த ஒரு பொருளையும் நாம் கைகளால் தொடுவதைத் தவிர்த்து அங்கிருக்கும் விற்பனைப் பிரதிநிதிகளைக் கொண்டே அவற்றைக் காண்பிக்கச் சொல்லலாம்.

பெரும்பாலான கடைகளில் இப்பொழுது நாம் கடைக்குச் செல்லும் பொழுது அவர்கள் உடல் வெப்பநிலையைப் பரிசோதிப்பது மற்றும் முகக்கவசம், கையுறை தருவது கைகளைச் சுத்தப் படுத்த சானிடைசர்கள் தருவது என அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறார்கள். நகைக்கடைகளுக்குச் செல்ல வேண்டிய தேவை ஏற்படும் பொழுதும் அதிக கவனத்துடன் பாதுகாப்பாகச் சென்று வந்தோமானால் எந்த பிரச்சனையும் இருக்காது. நகைக்கடைகளில் பெரும்பாலும் சமூக இடைவெளியுடனேயே வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்கிறார்கள். அதேபோல் கிருமிநாசினித் திரவங்களைக் கொண்டு அனைத்து இடங்களையும் சுத்தம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

ஒவ்வென்றையும் தொட்டுப் பாாத்து வாங்குவதைத் தவிர்த்து நமக்குத் தேவையான நகையை மட்டும் தேர்ந்தெடுத்து அணிந்து பார்த்து வாங்குவது நல்லது. இப்பொழுது சிறிய கடைகள் முதல் பெரிய கடைகள் வரை இணைய வழி வங்கிச் சேவை மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதையே ஊக்குவிக்கிறார்கள். வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அணியும் முகக்கவசம் மற்றும் கையுறைகளை பொது வெளியில் கழற்றாமல் வீட்டிற்கு வந்த பின்பு கழற்றுவது அதிக பாதுகாப்பைத் தரும்.

சமூக அக்கறையுடன் தனிநபர் இடைவெளி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாகப் பின்பற்றினால் நோயற்ற சமுதாயம் உருவாவதோடு வெளியில் சென்று வருவதும் பாதுகாப்பான நிகழ்வாகவே மாறிவிடும்.
Tags:    

Similar News