செய்திகள்
கைதான தினேஷ்குமார், கிரண்குமார்.

கர்ப்பிணி பெண்ணை தரதரவென இழுத்து சென்று செயின்பறித்த வாலிபர் கூட்டாளியுடன் கைது

Published On 2021-04-16 06:16 GMT   |   Update On 2021-04-16 06:16 GMT
பல்லாவரத்தில் கர்ப்பிணிப் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று செயின்பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை கூட்டாளியுடன் போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

தாம்பரம் அருகே உள்ள ஜமீன் பல்லாவரம் ரேணுகா நகர், தர்கா ரோடு பகுதியில் கீதா என்ற 24 வயது கர்ப்பிணி பெண்ணிடம் கடந்த 9-ந்தேதி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது வீட்டு காம்பவுண்டு சுவரில் அமைக்கப்பட்டுள்ள விநாயகரை தரிசனம் செய்த போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கீதாவின் கழுத்தில் கிடந்த தாலி செயினை பறித்தார். இதனால் நிலை குலைந்து அதிர்ச்சி அடைந்து கீதா சத்தம் போட்டுக்கொண்டே செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். இருப்பினும் கொள்ளையன் கீதாவை தரதரவென இழுத்துச் சென்றான். இதனை அந்த வழியாக சென்ற பொது மக்கள் அனைவரும் வேடிக்கை பார்த்தனர். யாரும் அருகில் சென்று பிடிப்பதற்கு முயற்சி செய்யவில்லை.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து பல்லாவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாபு தலைமையிலான தனிப்படையினர் செயின் பறித்த வாலிபரை அடையாளம் காண அதிரடி வேட்டையில் இறங்கினர்.

போலீஸ் விசாரணையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரின் பெயர் தினேஷ் குமார் என்பதும் மதுரை அந்தியூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.


கர்ப்பிணிப் பெண்ணை தரதரவென இழுத்துச் சென்று செயின்பறிப்பில் ஈடுபட்ட தினேஷ்குமார் வேகமாக ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தன.

இதையடுத்து அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் யார் என்பதையும் கண்டு பிடித்தனர். அவனது பெயர் கிரண்குமார். தேனி மாவட்டம் பழனி செட்டிப்பட்டியை சேர்ந்த இவன், தினேஷ்குமாரின் நண்பன் ஆவான்.

இவர்கள் இருவருரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் நகை, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் கர்ப்பிணி பெண்ணிடம் செயினை பறித்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் 75 வயது மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவர் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்ததும் தெரிய வந்தது.

அப்போது பிடிக்க சென்ற மூதாட்டியின் வயதான கணவரையும் இருவரும் கீழே தள்ளிவிட்டு தப்பி உள்ளனர்.

செயின் பறிப்பு கொள்ளையர்களில் தினேஷ்குமார் மீது ஒரு கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும் உள்ளது. மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருவரும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியே வந்துள்ளனர்.

பின்னர் மதுரையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடிக் கொண்டு சென்னை வந்துள்ளனர். பல்லாவரம் பகுதியில் தங்கியிருந்து குரோம்பேட்டை, தாம்பரம், பெரவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்த இன்ஸ்பெக்டர் ராஜேஷ்பாபு தலைமையிலான தனிப்படை போலீசாரை கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பாராட்டி உள்ளனர்.

Tags:    

Similar News