செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு

உத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2020-12-14 09:38 GMT   |   Update On 2020-12-14 09:38 GMT
கோர்ட்டின் நேரத்தை வீணடித்த உத்தரபிரதேச அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது.

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் அரசு ஊழியராக இருக்கும் பிரேம்சந்திரா என்பவர் கடந்த 1985-ல் பணிக்கு சேர்ந்தார்.

ஆனால் அவர் பணிக்கு சேர்ந்ததில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக கூறி கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எந்தவிதமான முறைகேடுகளும் நடக்கவில்லை. அவர் பணியில் தொடரலாம் என்று கடந்த 2009-ம் ஆண்டு தொழிலாளர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து உ.பி. அரசு சார்பில் அலகாபாத் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. தொழிலாளர் கோர்ட்டின் தீர்ப்பை 2018-ம் ஆண்டில் அலகாபாத் ஐகோர்ட் உறுதி செய்தது.

ஆனால் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய அளிக்கப்பட்ட அவகாசம் முடிந்தபின்பும், உ.பி. அரசு பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மேல் முறையீடும் செய்யவில்லை.

இந்த நிலையில் 500 நாட்கள் தாமதத்திற்கு பிறகு இந்த வழக்கில் உத்தரபிரதேச அரசு மேல் முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சஞ்சய் கிசன்கவுல், தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு உ.பி. அரசை கடுமையாக சாடியது. இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு அனுமதி மனுவை 576 நாட்கள் தாமதத்திற்கு பின் தாக்கல் செய்துள்ளீர்கள். தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டின் நேரத்தை வீணடித்த உத்தரபிரதேச அரசுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கிறோம்.

இந்த அபராதத்தை சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் நல நிதிக்கு செலுத்தவேண்டும். தாமதமாக பதில் மனுவும், அப்பீல் மனுவும் தாக்கல் செய்ததற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Tags:    

Similar News