செய்திகள்
கோப்புபடம்

ஆணிகளை அடிப்பதால் கருகும் மரங்கள் - இயற்கை ஆர்வலர்கள் வேதனை

Published On 2021-09-23 05:43 GMT   |   Update On 2021-09-23 05:43 GMT
தற்போது உடுமலை பகுதியிலுள்ள சாலையோர மரங்களில் ஆணி அடித்து, பல வகையான விளம்பர பலகைகளை பொருத்துவது அதிகரித்துள்ளது.
உடுமலை;

உடுமலை பகுதியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் கிராமப்புற இணைப்பு சாலைகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளன. நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் வாயிலாகவும், மரங்கள் நடப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன.

சில பகுதிகளில் இயற்கையாகவே பல வகை மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. ஆனால் சுயநலத்துக்காக சாலையோர மரங்கள் அழிக்கப்படுவது அதிகரித்துள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும், மரங்களை கருகச்செய்கின்றனர். அதற்கு மாற்றாக மரக்கன்றுகளும் நடவு செய்வதில்லை.

தற்போது உடுமலை பகுதியிலுள்ள சாலையோர மரங்களில் ஆணி அடித்து, பல வகையான விளம்பர பலகைகளை பொருத்துவது அதிகரித்துள்ளது. 

பசுமையான மரங்களின் தண்டு பகுதிகளில் ஆணி அடிப்பது அவற்றின் வளர்ச்சியை பாதிப்பதுடன் மரங்கள் கருகும் அபாயமும் உள்ளது. இத்தகைய விதிமீறலால் உடுமலை பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான மரங்கள் பாதிக்கப்பட்டு பரிதாப நிலைக்கு மாறி வருகின்றன.

பசுமைக்கும், இயற்கை சூழலுக்கும் உதவும், மரங்களை பாதுகாக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

’மரங்களிலுள்ள ஆணிகளை அகற்றவும், விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டால் ஆயிரக்கணக்கான மரங்களை பாதுகாக்க முடியும் என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News