செய்திகள்
கோப்பு படம்

ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி கோயம்பேடு வியாபாரிகள் மறியல் போராட்டம்

Published On 2019-10-10 12:03 GMT   |   Update On 2019-10-10 12:03 GMT
ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரி கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இன்று 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர்.
போரூர்:

‘நிஞ்சாகார்ட்’ என்ற பெயரில் காய்கறி, பழங்கள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு கோயம்பேடு வியாபாரிகள் கடும் கண்ட னம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ‘ஆன் லைன்’ வர்த்தகத்தை தடை செய்ய கோரி கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் இன்று அதிகாலை 4.15மணி அளவில் திடீரென திரண்ட 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனர். மார்கெட் முக்கிய நுழைவு வாயிலான கேட் எண் 7 மற்றும் எண் 14 ஆகியவற்றை பூட்டி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.

அப்போது “ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிக்க மாட்டோம் “விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் “நிஞ்சா கார்ட்டை” தடை செய்ய வேண்டும் என்று கோ‌ஷ மிட்டனர். தகவல் அறிந்து கோயம்பேடு மார்கெட் முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன், அண்ணா நகர் துனை கமி‌ஷனர் முத்துச்சாமி, இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் ஆகியோர் அங்கு வந்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட வியாபாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஒரு மணி நேரமாக நடைபெற்ற போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மறியல் போராட்டம் குறித்து வியாபாரி ஜி.எஸ். நடராஜன் கூறியதாவது:-

“நிஞ்சா கார்ட்” என்கிற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக காய்கறி மற்றும் பழங்களை நேரடியாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர்.

இதில் தரமற்ற மற்றும் அதிகளவில் தேங்கி கிடக்கும் பொருட்களை கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வந்து “நிஞ்சா கார்ட்” நிறுவனம் விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு பொருட்களை அடித்து வாங்கும் அந்த நிறுவனம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதன் காரணமாக மார்கெட்டில் வியாபாரம் பெரிதும் பாதிப்படைந்து உள்ளது. விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலனை பாதிக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகத்தை மத்திய மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News