ஆன்மிகம்
சபரிமலை

மண்டல-மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலையில் தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2021-10-09 08:45 GMT   |   Update On 2021-10-09 08:45 GMT
சபரிமலை மண்டல-மகர விளக்கு பூஜையை முன்னிட்டு அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைப்பார். 21 -ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷபூஜை, உச்ச பூஜைக்கு பின்னர் மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு தீபாராதனை, அபிஷேகம் ஆகியவை நடைபெறும், அதனை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். தினமும் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உட்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

கொரோனா கட்டுப்பாடு தளர்வு காரணமாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வராத பட்சத்தில் அந்த பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அய்யப்ப பக்தர்களுக்கான மருத்துவ சான்று மற்றும் ஆன்லைன் சான்றிதழ் ஆய்வு நிலக்கல்லில் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News