செய்திகள்
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறுவர் - சிறுமிகளுக்கான போட்டியை கொடியசைத்து தொடங்கிவைத்தபோது எடுத்த படம்.

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published On 2021-01-20 01:24 GMT   |   Update On 2021-01-20 01:24 GMT
கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறினார்.
கோவை:

கோவை வ.உ.சி பூங்கா பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சறுக்கு விளையாட்டு மைதானம் ஓடு தளத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சியாளர்கள் ஓய்விடம், பார்வையாளர் அரங்கு, கழிவறைகள், குடிநீர் வசதி, மின் விளக்குகள், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் மாநகராட்சி சார்பில் சுமார் ரூ.23 லட்சம் செலவில் விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த மைதானத்தை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேற்று திறந்துவைத்தார். சிறுவர், சிறுமிகளின் ஸ்கேட்டிங் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சறுக்கு விளையாட்டை பாதுகாப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக இந்த ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டுள்ளது.கோவையிலிருந்து குழந்தைகள் சறுக்கு விளையாட்டில் மாநில அளவில் பல்வேறு வெற்றிகளைப் பெற்று வருகின்றார்கள். இங்கு பயிற்சி பெறும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார்கள்.

கோவையில் சர்வதேச தரத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்க புறவழிச்சாலை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் உட்பட 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ, மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையாளர் மதுராந்தகி. கே.ஆர்.ஜெயராமன், சிங்கை முத்து, அருண்பிரசாத், பிரபாகரன், அர.தமிழ்முருகன், பகுதி செயலாளர்கள் வெண்தாமரை பாலு, பிந்து பாலு, சிவக்குமார், ராஜ்குமார், டி.ஜே. செல்வக்குமார், காட்டூர் செல்வராஜ், வெள்ளியங்கிரி, தம்பு என்ற மவுனசாமி, இலைக்கடை ஜெயபால் மற்றும் பீளமேடு துரை, மெட்டல் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News