செய்திகள்
ரங்கசாமி

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று

Published On 2021-05-09 16:12 GMT   |   Update On 2021-05-10 00:58 GMT
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுவை சட்டமன்ற தேர்தலின் போது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் பா.ஜ.க. கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முன்னதாக கடந்த 5-ந் தேதி அவர் சேலத்தில் உள்ள அப்பா பைத்தியசாமி கோவிலுக்கு சென்று வழிபட்டார். அங்கிருந்து புதுச்சேரிக்கு திரும்பியதும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதற்கிடையே புதுச்சேரியின் முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந் தேதி கவர்னர் மாளிகையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா முடிந்ததும் சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். சிறிது நேரத்தில் அங்கிருந்து புறப்பட்ட அவர் நேராக வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். டாக்டர்களின் ஆலோசனைப்படி அவர் சில மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டார்.

இந்தநிலையில் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் மிகவும் நெருக்கமாக இருந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜவகருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ரங்கசாமி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். இதனால் அவரை யாரும் சந்திக்க அனுமதி அளிக்கவில்லை.

இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபை வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தார். அப்போது அவருடன் காரில் யாரும் வரவில்லை. அவர் மட்டும் தனியாக வந்தார். சிறிது நேரம் அலுவலகத்தில் இருந்த அவர் அதிகாரிகள், ஊழியர்கள் யாரையும் சந்திக்கவில்லை. மிகவும் சோர்வாக அவர் காணப்பட்டார். சுமார் 30 நிமிடங்கள் மட்டும் தனது அலுவலகத்தில் இருந்த அவர் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்று ஓய்வெடுத்தார்.

இதற்கிடையே முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு மருத்துவக்குழுவினர் கொரோனா தொற்று பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு தொற்று இருப்பது நேற்று இரவு உறுதிசெய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் (எம்.ஜி.எம்.) அனுமதிக்கப்பட்டார். முதல்-அமைச்சராக ரங்கசாமிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News