செய்திகள்
ஆதார் அட்டை மற்றும் வெங்காயம் (கோப்பு படம்)

வெங்காயத்துக்கு வந்த வாழ்வு - உ.பி.யில் ஆதார் அட்டையை அடகு வைத்து பெற்றுச் செல்லும் நிலை

Published On 2019-11-30 15:23 GMT   |   Update On 2019-11-30 15:23 GMT
உத்தர பிரதேசத்தில் ஆதார் அட்டையை அடமானமாக வைத்து வெங்காயம் பெற்றுச் செல்லலாம் என சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சில கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாரணாசி:

நாட்டில் வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கும் அதிகமாக விற்கப்படுவதால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். 

இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசு மற்றும் சில மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. 

இதற்கிடையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் காய்கறி கடைகளில் உள்ள வெங்காயங்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் வாரணாசியில் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த இளைஞர் அணியினர் சிலர் நடத்தும் கடைகளில், பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையை அடமானமாக வைத்து வெங்காயத்தை வாங்கிச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர்.  

அக்கட்சியை சேர்ந்த அடகு கடை நடத்தும் சிலர் ஆதார் அட்டை மட்டுமல்லாமல் வெள்ளி நகைகளை அடமானமாக வைத்தும் வெங்காயத்தை வாங்கிச் செல்லலாம் என தெரிவித்துள்ளனர். 



இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அடகு கடை நடத்தும் ஒரு உரிமையாளார் கூறுகையில், 'உத்தரபிரதேசத்தில் உள்ள சில கடைகளில் பணத்தை பாதுகாப்பாக வைக்க பயன்படும் பெட்டகங்களில் வெங்காயம் வைக்கப்படுள்ளது. இதன் மூலமாக மாநிலத்தில் நிலவிவரும் வெங்காய விலை உயர்வுக்கு எங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்’ என அவர் தெரிவித்தார். 

பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எதிர்கட்சியாக செயல்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News